Home One Line P1 மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்

மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும்

1263
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மஇகாவின் பாரம்பரிய தொகுதிகளை மற்றும் மஇகா அடையாளம் கண்டுள்ள சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த தலா பத்து நிர்வாகிகள் கொண்ட 200 பேர் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இந்தப் பயிற்சிப் பட்டறைக்குத் தலைமையேற்று உரையாற்றினார்.

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தல் ஆயத்தப்பணிகளின் ஆரம்ப நிலையினை தொடக்கி வைக்கும் வகையில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. வரும் பொதுத் தேர்தலில் மஇகா போட்டியி|டும் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் வலுவான தேர்தல் இயந்திரங்களை இறக்கவுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமரான நஜீப் துன் ரசாக் அவர்களின் காலக்கட்டத்தில் தேசிய முன்னணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தேசிய முன்னணி கட்சிகளுடன் இணைந்து குறிப்பாக மலாய் மற்றும் சீனர்களுடன் இணைந்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கினோம். இந்தியர்களுகென்று ஒரு மனம் உள்ளது. அதுதான் பெரிய மனது. காரணம், இந்தியர் அல்லாத வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் வாழ்ந்த இந்தியர்கள் முழுமையான ஆதரவினை வழங்கினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நமது அரசியல் அலையில் பல்வேறு மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். குறிப்பாக, இந்திய வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என பல்வேறு கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

இதனை கேட்கும்பொழுது நமது மனம் வேதனையடைகிறது. காரணம், காலனித்துவக் காலக்கட்டத்திலிருந்து இந்நாட்டிற்காக நமது மூதாதையர்கள் முதுகெலும்பு தேய உடலுழைப்பைத் தந்திருக்கிறார்கள். ஏன் தந்தார்கள்? அவர்களுக்கு அடுத்துவரும் சந்ததியினர் நம்மைப் போல் வேதனையுறாமல், சிறந்த வாழ்க்கையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அன்று அவர்கள் இரத்தம் சிந்தினார்கள்.

ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும். பாஸ், பெர்சாத்து போன்ற கட்சிகள் தேசிய முன்னணியின் பங்காளித்துவக் கட்சிகளாக மாறியுள்ளன. கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் நாம் பெற வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகளும் நமக்குத் தென்படுகின்றன. குறிப்பாக, தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

நாம் மானமுள்ள ஓர் இனமான வாழ்கிறோம். புதிய கட்சிகள் தோன்றினாலும்கூட, அக்கட்சிகளில் இந்தியர்கள் யாரும் உறுப்பியம் பெறவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

எந்தவொரு பிரச்சினை வந்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கும் கட்சியாக மஇகா இருந்து வருகிறது. அரசியல் நீரோட்டத்தில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் பல்வேறு சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். அடுத்த 20, 30 ஆண்டு காலங்களில் ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்காலத்தின் விதியை தீர்மானிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனை எதிர்கொள்வதற்கு நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் கடந்த 3 ஆண்டுகளாக தாம் சொல்லி வருவதாகவும் ச. விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்று பலர் நினைக்கலாம். மஇகா ஓரம் கட்டபபட்டுள்ளது என்றும் சிலர் கருத்து கூறலாம். ஆனால், நமது காலில் நிற்பதற்குரிய ஆற்றலை நாம் பெற்றுள்ளோம் என்றார்.

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நமது தொகுதிகளின் வெற்றியில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதியிலும் நமது வேட்பாளர்கள் வெற்றிப் பெற வேண்டுமென்றால், அதற்கான அரசியல் களத்தினை மஇகா கிளைத் தலைவர்கள்தான் அமைத்துப் பணியாற்ற வேண்டும். நமது வேட்பாளர்களின் நிலைகளை அவரவர் தொகுதிகளில் கிளைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் உயர்த்த வேண்டும். அவர்களுக்குரிய தகுதியை உயர்த்திப் பேச வேண்டும். சிறுசிறு கூட்டங்களை அடிக்கடி கூட்ட வேண்டும். அக்கூட்டங்களில் ஒரு பத்து உறுப்பினர்கள் இருந்தாலும் அக்கூட்டத்தினை ஆக்கமுடன் உரையாற்றி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட தொகுதியில் எவ்வாறு வெற்றிப் பெறுவது என்பது குறித்து ஒரு கருத்துக் கலந்துரையாடல் செய்யலாம். மேலும் இதனை பங்காளித்துவக் கட்சிகளுடன் இணைந்தும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் இதற்கெல்லாம் நீங்கள் உண்மையாக – நேர்மையாக உழைக்க வேண்டும்.

உங்களது கருத்துக்கள் – முடிவுகளின் அடிப்படையில்தான் மஇகா தொகுதிளைப் பெற்று வெற்றிப் பெறுவதற்குரிய ஆயத்தப் பணிகளை தலைமையகம் மேற்கொள்ள இயலும் என்பதனை யாரும் மறந்துவிட வேண்டாம். அடிப்படை உறுப்பினர்களின் கருத்துகளைப் பெற வேண்டும் என்பதே மஇகாவின் நோக்கமாகும்.

அதனால் உங்களது அடிப்படை பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னாள் பிரதமர் துன் மகாதீர் காலக்கட்டத்தில் அதிகமான மலாய்க்காரர்கள் வாக்குகள் இல்லாத காரணத்தால் இந்தியர்களின் வாக்குகளை அதிகம் கவர்ந்தார். அதோடு மாத்திரமின்றி இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நினைத்திருந்தார்.

பங்காளிக் கட்சிகள் மஇகாவினரை அலட்சியப்படுத்தலாம். மரியாதைக் குறைவாகக் கூட எடை போடலாம். இருந்தாலும் அதனை சகிப்புத் தன்மையுடன் பொறுத்து, நமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதிச் செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களது சிந்தனைப் போக்குகளை மாற்றி, இதர இனங்களோடு இணைந்து பணியாற்றுவதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்தியர்களின் நலன் அரசாங்கத்தில் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், நாம் துணிந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை, அங்கீகாரங்களை மஇகா உணர்ந்துள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் மஇகா பல திட்டங்களை வரையறுத்துள்ளது.

நமக்கு மற்றொருப் பிரச்சினையாக இருப்பது தமிழ்மொழியாகும். தேசிய, தமிழ்மொழிப் பள்ளிகளைத் தவிர்த்து, தேசிய மலாய்மொழி ஆரம்ப பள்ளிக்கூடங்களில் பயிலும் 50,000 மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியான தமிழ்மொழி அறியாமல் உள்ளனர். எனவே, அப்பள்ளிகளில் எல்லாம் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று மஇகா தொடர்ந்து வலியுறுத்தி வரும்.

சிங்கப்பூரில் உள்ளது போன்று அரசு அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியை கட்டாயம் சேர்த்துக் கொண்டிருப்பதைப் போன்று, இந்நாட்டிலும் ஜனநாயகத்தை பின்பற்றும் வகையில், மற்றும் தமிழ்மொழியை போதிப்பதற்கு மஇகா போராடும்.

அரசியல் ரீதியில் பல்வேறு கூறுகளாக இந்தியச் சமுதாயம் பிரிந்திருந்தாலும், அதனை கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒரங்கட்டி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்குரிய ஆற்றலை நாம் பெற்று, இந்திய வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிப் பெறுவதற்குரிய திறனை நாம் பெற வேண்டும் என்றும், அதற்குரிய அரசியல் களத்தில் இறங்க வேண்டுமென்றும்  விக்னேஸ்வரன் தமது உரையில் கூறினார்.