புது டில்லி: இந்தியாவில் புதிய முதல் கொவிட்-19 தடுப்புமருந்து கோவாக்சின் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அனைத்துலக அளவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15.5 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா அனைதுலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 1,306,002 நபர்கள் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று மத்திய சுகாதாரத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 347,502 பேரும், அடுத்தபடியாக தமிழகத்தில் 199,749 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொவிட்19 தொற்றால் 740 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி ஆறு இலட்சத்தைக் கடந்த கொவிட்19 தொற்று எண்ணிக்கையானது அடுத்த மூன்று வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.