Home One Line P1 ‘மகாதீர் என்னை ஏமாற்றினார்!’- அன்வார் இப்ராகிம்

‘மகாதீர் என்னை ஏமாற்றினார்!’- அன்வார் இப்ராகிம்

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தாம் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால் ஏமாற்றப்பட்டார் என்பதை உணர்ந்துள்ளார்.

டாக்டர் மகாதீர் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்தபின், பதவியை அவரிடம் ஒப்படைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று அன்வார் நம்பியதாகக் கூறினார்.

“எங்களுக்கு முன்னர் தெரியாது. ஆனால், இப்போது தெரியும்” என்று அன்வார் ஒரு சீன நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், இந்த நவம்பரில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) கூட்டத்திற்குப் பிறகு பதவியை விட்டு விலகுவதாக டாக்டர் மகாதீர் இறுதியாக தேதியை மாற்றியிருந்தார்.

பிப்ரவரி 24-ஆம் தேதி, அவர் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு அறிவிக்காமல் பிரதமர் பதவியை விட்டு விலகினார். இது நம்பிக்கைக் கூட்டணித் தலைமையிலான அரசாங்கத்தின் சரிவுக்கு வழிவகுத்தது மற்றும் அடுத்தடுத்த வாக்குறுதியையும் தகர்த்தது.

அன்வார் பிரதமராக இருப்பதற்கு பலர் எதிர்த்ததை அவர் அறிந்ததாகக் கூறினார்.

” ஊழல் செய்தவர்களும் எனக்கு எதிராக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ‘அன்வார் உண்மையான மலாய்க்காரர் அல்ல, அவர் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கவில்லை’ என்று கூறி இன அரசியலை கையில் எடுத்தனர்.

“நான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். முக்கியமாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு.

“அனைவரும் வெற்றி பெற முடியும். சீன தொழில்முனைவோர் உட்பட திறனுள்ளவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

“நான் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளேன். ஏழைகளிடமிருந்து திருடுவோரை நான் வெறுக்கிறேன், ” என்று அன்வார் கூறினார்.

22 மாத நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு டாக்டர் மகாதீர் பிரதமர் பதவி விலகியதே முக்கிய காரணம் என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.

டாக்டர் மகாதீர் பதவி விலகாவிட்டால், நம்பிக்கைக் கூட்டணி இப்போதும் அரசாங்கமாக இருந்திருக்கும். மேலும், அனைத்து உள்பிரச்சனைகளையும் தீர்க்க முடிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

“பிகேஆர் மற்றும் பெர்சாத்துவில் துரோகிகள் உள்ளனர் என்பது உண்மை.

“ஆனால், அந்த துரோகிகள் ஒரு வாரத்தில் வளர்ந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? இதை அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும். கேள்வி என்னவென்றால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நாம் ஏன் அனுமதிக்கிறோம்?

“இதனை சிலர் விரும்புவார்கள். சந்திப்புக் கூட்டத்தின் ஒலிப்பதிவுகள் அதை நிரூபித்துள்ளது, ” என்று அன்வார் கூறினார்.

டாக்டர் மகாதீரின் பதவி விலகல் பிகேஆரின் அழுத்தத்தினால்தான் என்று அன்வார் மறுத்தார். டாக்டர் மகாதீர் பதவியை காலி செய்யுமாறு பிகேஆர் அடிமட்டத்தினர் கோரியது ஒரு வகையான அழுத்தம் அல்ல என்று அவர் கூறினார்.

“ஏன் அழுத்தம் இருந்தது? அவர் (டாக்டர் மகாதீர்) வெளியேறுவதாகத் தெரியவில்லை. ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், தேர்தல் வரை…” என்று அன்வார் குறிப்பிட்டார்.

“டாக்டர் மகாதீர் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெற முடியவில்லை (ஆட்சி செய்ய)” என்று அன்வார் கூறினார்.