கோலாலம்பூர்: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட நஜிப் துன் ரசாக்கின் மேல்முறையீட்டு செயல்முறை முடிவடையும் வரை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமைகளை அவர் நிறைவேற்ற முடியும்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருண் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 27 வரை நீடிக்கும் மக்களவை அமர்வில் முன்னாள் பிரதமரும் கலந்து கொள்ளலாம் என்று அசார் கூறினார்.
“மத்திய அரசியலமைப்பின் விதிகளின்படி, அனைத்து மேல்முறையீட்டு செயல்முறைகளும் நிறைவடையும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக அவரது நிலையில் மாற்றமில்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான அபராதம் மற்றும் மன்னிப்பு பெறாவிட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மத்திய அரசியலமைப்பின் பிரிவு 48 (1) (இ) கூறுகிறது.
67 வயதான நஜிப், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் நிதியில் அதிகார அத்துமிறல் சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.