இலண்டன் : உலகின் பொருளாதார மையமான இலண்டன் மாநகரில் சுமார் 180 வருடங்கள் பழமையான வரலாற்றைக் கொண்டது இலண்டன் பல்கலைக்கழகம்.
அந்தப் பல்கலைக் கழகத்தின் சுமார் நூறு வருடம் பழமையான SOAS (School of Oriental and African Studies) கல்லூரியில் தமிழ்த்துறை ஒன்றை அமைக்கும் பணிகளை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK, www.tamilstudiesuk.org) மேற்கொண்டு வருகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்கத் திட்டத்திற்கு, உலகின் பல பகுதிகளிலும் இருந்து தமிழர்கள் பங்களிக்கும் வகையில், இணையவழியான ஒரு பன்னாட்டு கலந்துரையாடல் வலையரங்கம் இன்று ஆடி 18-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஆகத்து 2, 2020) அன்று இலண்டன் நேரம் மதியம் 2 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய மேலதிகத் தகவல்களை எமது இணையத்தளம் www.tamilstudiesuk.org இல் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பா மட்டுமல்லாது, கனடா, அமெரிக்கா, குவைத், மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான் போன்று உலகின் பல பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாகப் பரவி வாழும் தமிழர்கள் பங்கேற்றுத் தங்கள் வாழ்த்துரையையையும் கருத்துகளையும் வழங்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியாவின் சார்பில் முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன், முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், தமிழறிஞர் இரா.திருமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.
கல்வியாளர்கள் சுப.நற்குணன் மற்றும் பழனி சுப்பையா ஆகிய இருவரும் மலேசியாவுக்கான தொடர்பாளர்களாக இருந்து இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். மலேசியாவின் சார்பில் 60 பேராளர்கள் இந்தப் பன்னாட்டு கருத்தாடல் வலையரங்கத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
உலக நட்புதினமான ஆடி 18 (ஆகத்து 2) அன்று நிகழும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நட்பு பாராட்டவும், இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பற்றிய தகவல்களைப் பெற்று, இந்த பரப்புரைத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
Meeting Date : Sunday, August 2, 2020
Meeting Time: 2PM (London), 6.30PM (Chennai), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kuala Lumpur/ Singapore), 10PM (Tokyo)
Zoom Meeting ID: 882 3310 2574
Password: soaslondon
Website for Info and registration: http://tamilstudiesuk.org/2020/07/international-outreach-event/
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை – சில தகவல்கள்
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (கல்வி அதிகாரம் , குறள் : 397)
‘கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?’ – என்ற நம் தமிழ் மறைத் தலைவனது கேள்வி தமிழ் கற்றலுக்கும் பொருந்தும்!
சுயமானதாகவும், பேச்சு, எழுத்து, பாரம்பரியம் போன்றவற்றில் பழமை வாய்ந்ததாகவும் முத்தமிழ், முச்சங்கம் ஆகியவற்றைக் கொண்டு இலக்கண இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தது நம் தமிழ்மொழி.
உயிருக்கும் மேலான செந்தமிழை, புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டில் குடியேறிய தமிழ் மக்களாக வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியை ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) அமைப்பு, ‘இலண்டன் பல்கலைக்கழகம் – SOAS (School of Oriental and African Studies) இன் தெற்காசிய கல்வி கூடத்துடன்’ இணைந்து முன்னெடுத்துச் செல்கிறது.
பிரித்தானியா (பிரிட்டன்) உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியத்தில் (யுனைடெட் கிங்டம் – UK), ‘இலண்டன் பல்கலைக் கழகத்தில்’ தமிழ் படிப்பு உருவாக்கம் ஏன்? எனும் உங்கள் கேள்விக்கு பதிலாக சுவையான பல செய்திகளை வழங்குகிறோம்.
கி.பி. 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட SOAS, இலண்டன் பல்கலைக்கழகம், ஆசிய, ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றிய படிப்பிற்கு உலகப் புகழ் பெற்ற முன்னணி கல்வி நிறுவனங்களுள் முதன்மையானதாகும்.
முதன்மை வாய்ந்த 1,50,000 ஆவணங்கள், தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்கள் முதலிய பல சிறப்புகளை உள்ளடக்கிய நூலகத்தினை கொண்டு இலண்டனின் மையப்பகுதியில் இவ்வளாகம் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், பல சிந்தனைச் சிற்பிகளையும், 300-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களையும், தொலைதூரக் கல்வியில் பயில்வோர் உள்பட சுமார் 9,500 மாணவர்களையும் கொண்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது.
இந்த பல்கலைகழகம் பயிற்றுவிக்கத் துவங்கிய 20 உலக மொழிகளில் ‘தமிழும்’ ஓன்று! தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற ‘முதல் ஆங்கிலேயர்’ ஆன M.S.H தாம்சன் (இவர் நம் மறைமலை அடிகளின் மாணவர்), இந்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்ட முனைவர் சான் மார் (Dr.John Marr), சுடூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn) போன்றவர்களால், தமிழ் வகுப்புகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டன.
புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் நிதிப் பற்றாக்குறை முதலிய பல்வேறு காரணங்களால் தமிழ்க் கல்வி பயில்விப்பு நலிவுற்று பின்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்ட தமிழ்த் துறையை உயிர்ப்பித்து, சிறந்த அறிஞர்களின் மூலம் செம்மை செய்து, உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஐக்கிய இராச்சியம் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தமது உயர் கல்வி படிப்பில் தமிழை முதன்மை மற்றும் ஆராய்ச்சி பாடமாக எடுத்து இலண்டன் மாநகர் – SOAS யில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
இச் சீர்மிகு பணியை ஒருமுகப்படுத்தி, ஒருங்கிணைத்து SOAS உடன் இணைந்து, நிதி திரட்டல் மற்றும் மீட்டுருவாக்க பணிகளை மேற்கொள்ள “ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK)” அமைப்பு உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட தொடங்கி விட்டது.
மேலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை ஏற்படுத்துவது, தமிழ் பாட சாலைகளுக்குத் தேவையான பாடத் திட்டத்தை அறிஞர்கள் மூலம் உருவாக்கி ‘தேர்வு அங்கீகாரம் (Accreditation)’ பெற்று, ஐக்கிய இராச்சியப் பல்கலைக்கழக படிப்புகளுக்கு வழங்கப்படும் தகுதிப் புள்ளிகளை (UCAS Points), ‘தமிழ் மொழிக்கும்’ பெற்றுத் தருவது, இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.
ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு கல்விச் சலுகைகள் (Scholarships & Fellowships) அளித்து அவர்களுக்கு தமிழ் கற்க, ஆய்வுகள் மேற் கொள்ள உறுதுணையாக நிற்பது தவிர, SOAS நூலகத்தில் உள்ள பல்வேறு பனை ஒலைச் சுவடிகளை மின்னாக்கம் (digitalization) செய்து, அதை உலகின் பல பகுதிகளில் பரந்து வாழும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கச் செய்வதும் இந்தப் பணியில் அடங்கும்.
மேற் கூறிய அனைத்து செயல்பாடுகளையும் ஈடேற்றுவதற்காக, பத்து மில்லியன் (GBP10 million) பிரித்தானிய பவுண்டுகளைத் திரட்டி, நெடுங்கால வைப்பு நிதியாக உருவாக்குவது. அதன் வருவாயைக் கொண்டு, தேவையான பாடத் திட்டத்தை SOAS துணையுடன், தகுதி பெற்ற வல்லுனர்களைக்கொண்டு வடிவமைத்து, சிறப்பான ஆசிரியர்களை நியமித்து, மீண்டும் தமிழ்த் துறையை நிறுவுவது, ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை அமைப்பின் குறிக்கோள்!.
தமிழ் ஆர்வலர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தன்னார்வல தொண்டர்களாவர். பங்களிப்பு நிதியை நேரடியாக SOAS க்கு செலுத்தி அதன் விபரங்களை SOAS இன் அதிகார வலைத்தளத்தில் காணலாம்.
திரட்டப்பட்ட நிதி தமிழ் துறைக்கு மட்டுமே செலவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசால், 1996 ஆம் ஆண்டு நன்கொடையாக வழங்கப்பட்ட ‘திருவள்ளுவர் சிலை’ இன்றும் இலண்டன் பல்கலைக்கழகம் – SOAS வளாகத்திற்கு அழகு சேர்க்கிறது. இலண்டன் வரும் தமிழர்கள், இந்த சிலையை தேடி வந்து பார்ப்பது நம் அனைவருக்கும் பெருமை.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்ற பாரதியின் வரிகளுக்கு அழகு சேர்க்கும் வகையில் அந்த ‘வானத்தின் வண்ணமான’ நீல நிறத்தில் திருவள்ளுவர் ஒளிர்வது புவியில் எங்கும் காண இயலாத சிறப்பு. அவருக்கு மேலும் சிறப்பு செய்கின்ற வகையில், முழுத் தமிழ்த் துறையும் மீட்டுருவாக்கி, தமிழ்க் கல்வியை பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் இப்பணி, அரசு மற்றும் தமிழ் புரவலர்கள் மூலம் நிச்சயம் நிறைவேறும் என்பது திண்ணம்.
மேலதிக தகவல்களுக்கு கீழ்க்காணும் அதிகாரபூர்வ வலைத் தளத்தை அணுகலாம்;
http://www.tamilstudiesuk.org/