Home உலகம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை! இன்னொரு அனைத்துலகப் பெருமை!

இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை! இன்னொரு அனைத்துலகப் பெருமை!

2004
0
SHARE
Ad

இலண்டன் – உலகப் புகழ் பெற்று விளங்கும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் கடந்த ஜூலை 18-ஆம் தேதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார்.

ஏற்கனவே, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தமிழக அரசின் ஒத்துழைப்பு – நிதி உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பு வரலாறு:

இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த தமிழ் படிப்புகள், எம்.எச்.ஐச். தாம்சன் (M.S.H.Thomson), சான் மார் (John Marr), டூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), மற்றும் டேவிட் சுல்மான் (David Shulman) போன்ற தமிழ் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது என்ற பெருமைக்குரியது. 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் இந்தப் படிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டன. உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், பிரிட்டனில் அதிகரித்துள்ள தமிழ் மக்கள் தொகையினால் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழ் இருக்கை அமைப்பு (Tamil Chair UK):

#TamilSchoolmychoice

பிரிட்டனில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, திரு.செலின் சார்ச் அவர்கள் தலைமையில், கடந்த வருடம் நவம்பர் (November 2017) முதல் செயல்பட்டு வந்தது.

இந்த தமிழ் இருக்கை அமைப்பு, முதல் கட்டமாக ஆக்சுபோர்ட், கேம்பிரிட்ச், மற்றும் இலண்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்து, இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, இலண்டன் பல்கலைகழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் தான் இலண்டன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது என்பதும், இந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தான் பல அரும்பெரும் ஓலைச்சுவடிகளும், புராதன தமிழ் புத்தகங்களும் உள்ளன என்பது, இந்த தமிழ் இருக்கைக்கு வலு சேர்க்கும் பிற காரணிகள்.

அதிகாரப்பூர்வ ஒப்புதல்:

இந்நிலையில், இலண்டன் பல்கலைக்கழகம், தமிழ் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் படிப்புகளைத் துவங்குவதற்கு உரிய அதிகாரப்பூர்வ அனுமதியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன் வைத்து வழங்கினர். அனுமதிக் கடிதத்தை, கல்லூரி துணை முதல்வர் நவதேசு அவர்கள் வழங்க, தமிழ் இருக்கைக் ஒருங்கமைப்புக் குழுவினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

தமிழ் இருக்கை அமைத்தல் மற்றும் வருடாந்திர கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் என இருக்கைக்கு மொத்தம் 6 மில்லியன் பவுண்டுகள் முதல் 10 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலண்டன் தமிழ் இருக்கை 2021 இல் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ் இருக்கை கொண்டாட்ட நிகழ்வுகள், பல்கலைக்கழகத்தால் அக்டோபர் 14, 2018 அன்று கொண்டாடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.