சென்னை – உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகமான ஹார்வார்ட்டில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படுவது தொடர்பில், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் எதிர்வரும் ஜனவரி 18-ஆம் தேதி அமெரிக்கா செல்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் சில நாட்கள் கழித்து கனடா நாட்டிற்கும் வருகை தந்து அங்குள்ள தமிழர்களையும், தமிழர் இயக்கப் பிரதிநிதிகளையும் பாண்டியராஜன் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மலேசியாவிலும் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஆதரவு
இந்திய நாணய மதிப்பில் ஏறத்தாழ 40 கோடி ரூபாய் செலவில் ஹார்வார்ட்டில் அமைக்கப்படவிருக்கும் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசாங்கம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
மலேசியாவிலும் பல அன்பர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் மலேசியாவிலிருந்து தனி அமைப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடையை வழங்கியிருக்கிறது.