ஈப்போ : பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இலண்டன் மாநகரில் ஏறக்குறைய 200 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வ ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
தற்போது இலண்டனிலும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் உள்ளது. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. இதேபோல, நம் மலேசியாவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வீட்டிருந்தே இல்லிருப்புக் கற்றல் முறைகளை இணையம் வழி மேற்கொண்டனர்.
அந்த வகையில், பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ‘இயங்கலை பயில்களம்’ என்ற பெயரில் இணையம் வழி பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு, தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை என்ற தலைப்பில் இயங்கலையில் பல்வேறு பயிற்சிகளைத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குநர் சுப.நற்குணன் தலைமையில் நடந்த இந்த வலையரங்கப் பயிற்சிகள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பினைப் பெற்றன. பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு சார்பில் 35 ஆசிரியர்களும் 10 தலைமையாசிரியர்களும் இந்த வலையரங்கப் பயிற்சிகளைச் சிறப்பாக வழிநடத்தினார்கள்.

தற்போது பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக் குழுவினர் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கவுள்ளனர்.
இன்று 9.8.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 9:00 தொடங்கி ‘இணையம் வழி கற்றல்’ எனும் தலைப்பில் இப்பயிற்சி இயங்கலை மூலம் நடைபெறவுள்ளது.
மலேசியா சார்பில் முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறனும், இலண்டன் சார்பில் சிவா பிள்ளையும் வாழ்த்துரை வழங்குவார்கள். இலண்டன் பல்கலைக்கழத் தமிழ்த்துறை நிருவாகக் குழுத் தலைவர் செலின் சார்சு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
இலண்டன் மற்றும் மலேசிய ஆசிரியர்கள் 200 பேர் இந்த வலையரங்கப் பயிற்சியில் கலந்துகொள்வார்கள். மேலும், வலையொளி மற்றும் முகநூலில் நேரலை ஒலிபரப்பும் நடைபெறும்.
மேலதிகத் தகவல்களுக்கு:-