கோலாலம்பூர்: 2021-ஆம் ஆண்டிற்கான பள்ளி ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கும்.
ஆண்டு இறுதி தேர்வுகள் ஒத்திவைத்ததால், 2020- ஆம் ஆண்டிற்கான ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
“2021 பள்ளி தவணை ஒத்திவைக்க வேண்டும், ஏனெனில் நாம் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகள் 2021 முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
கொவிட் 19 பாதித்ததைத் தொடர்ந்து மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி தவணைகள் டிசம்பர் 17 மற்றும் 18 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி விடுப்பு ஜோகூர், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடாவில் 42 நாட்களிலிருந்து 14 நாட்களாகவும், பிற மாநிலங்களில் 41 நாட்களிலிருந்து 13 நாட்களாகவும் குறைக்கப்படுகிறது.
பள்ளி முடிவடையும் போது இந்த ஆண்டு மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்த குறைந்தபட்ச புரிதலைப் பெறுவதற்கு அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் கூறினார்.
“இந்த ஆண்டு மாணவர்கள், அடுத்த ஆண்டு குறைந்தபட்ச நுழைவு மட்டத்தில் தேர்ச்சி பெற முடியாது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். மாதம் 1, மாதம் 2 தொடங்கி, பின்பு 3- ஆம் மாதத்திற்குள் அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாவிட்டால், மாணவர்கள் ஊக்கத்தை இழக்க நேரிடும். அவர்கள் பின்தங்கி விட்டனர் என்று எண்ணுவார்கள் “என்று அவர் கூறினார்.