Home One Line P1 பள்ளி மூடல்: தேவைப்பட்டால் கல்வி அமைச்சு, மாநிலங்களுடன் பேசும்

பள்ளி மூடல்: தேவைப்பட்டால் கல்வி அமைச்சு, மாநிலங்களுடன் பேசும்

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொவிட்19 தொற்று பரவாமல் தடுக்க பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கல்வி அமைச்சகம், மாநில கல்வித் துறை இயக்குநர் மூலம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடும் என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில், மாநில கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளி அமர்வுகளின் முன்னேற்றத்தை கல்வி அமைச்சு கண்காணிக்கும் என்றும், கல்வித் துறை இயக்குனர் மாநில பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினராக இருப்பதாகவும் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

“ஜூலை 29- ஆம் தேதி சரவாக் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான நடமாட்டக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புக்குப் பின்னர், கூச்சிங் மாவட்டத்தில் 213 பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஒத்திவைக்க கல்வி அமைச்சின் ஒப்புதலுடன் சரவாக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இதில் கூச்சிங் மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் 87 பள்ளிகள், 99 பள்ளிகள் (பாடாவான்), மற்றும் 27 பள்ளிகள் (சமாராஹான்) ஆகியவை அடங்கும். ஆகஸ்ட் 3- ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பள்ளியின் மறு திறப்பு ஆகஸ்ட் 17- க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், பாலர் பள்ளிகள், படிவம் 5 மற்றும் 6 வகுப்புகள் மூன்று மாவட்டங்களில் வழக்கம் போல் இயங்குகின்றன,” என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 11 புதிய கொவிட்19 சம்பவங்களைப் பதிவு செய்த சிவகங்கா தொற்றுக் குழுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கெடா அரசு குறிப்பிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியது.

நான்கு மாவட்டங்களில் இது அமலுக்கு வந்தது.

இதனால், கெடா தேசிய பாதுகாப்பு மன்றம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து பள்ளிகளை ஞாயிற்றுக்கிழமை முதல் 28 நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.

ஹோஸ்பா இடைநிலைப்பள்ளி , ஹோஸ்பா தேசிய ஆரம்பப் பள்ளி, மெகாட் டேவா இடைநிலைப்பள்ளி , மெகாட் டேவா தேசிய ஆரம்பப்பள்ளி, மற்றும் பாடாங் தெராப்பில் உள்ள குபாங் பாலாஸ் தேசிய ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கண்காணிப்பில் இருந்த நோயாளியான, ஓர் உணவக உரிமையாளருடன் இந்த தொற்றுக் குழுத் தொடங்கியது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறினார்.

313 பேர் இது தொடர்பாக பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியது, அவர்களில் 280 பேருக்குத் தொற்று ஏற்படவில்லை.