சென்னை: நேற்று திங்கட்கிழமை எப்போதும் போல் அல்லாமல் தமிழகத்தில் கொவிட்19 தொற்றால் 109 பேர் மரணமுற்றனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.63 இலட்சத்தினை கடந்துள்ளது. ஒட்டு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 263,222- ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமானதாகும். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,241- ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொவிட்19 தொற்று அறிகுறி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அவர் சென்றிருந்தார். அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது .
இதனிடையே, நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கையானது 18 இலட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், கொவிட் நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது மீண்டும் அரசாங்கத்தின் மீதான தனது விமர்சனத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரம் பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளில் அதிகபட்ச ஒரு நாள் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாதான் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி ஒரு புள்ளிவிவரத்தை முன்னிறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.