கால ஓட்டத்தில் டிஜிட்டல் எனப்படும் மின்னிலக்க முறையிலான படம் எடுக்கும் புகைப்படக் கருவிகள் தயாரிக்கப்பட்டு, அதற்குப் பின்னர் செல்பேசிகளிலும் புகைப்படம் எடுக்கும் வசதிகள் புகுத்தப்பட்டது.
இன்றைக்கு படச் சுருள்கள் அறவே அழிந்து விட்டன. புகைப்படம் என்றாலே டிஜிட்டல் புகைப்படம்தான் என்றாகி விட்டது.
கோடாக் என்ற வணிக முத்திரையும் மெல்ல மெல்ல மக்களின் மனத்திரைகளில் இருந்து கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு விட்டது.
தற்போது மீண்டும் புத்துயிர் எடுத்துள்ளது கோடாக் நிறுவனம். தற்போது மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கோடாக் பார்மசிடிக்கல்ஸ் என்ற புதிய மருந்து தயாரிப்பு பிரிவு இதற்காகத் தொடங்கப்பட்டிருக்கிறது.
கோடாக் நிறுவனத்திற்கு 765 மில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்கக் கடனை வழங்கியிருக்கிறது அமெரிக்க அரசாங்கம்.
அசல் மருந்துகளுக்கு மாற்றாக, அதே தரத்தில் தயாரிக்கப்படும் ஜெனரிக் எனப்படும் இரக மருந்துகளின் உள்ளடக்க மூலப் பொருட்களைத் தயாரிக்க இந்த அரசாங்கக் கடன் பயன்படுத்தப்படும்.
ஈஸ்ட்மேன் கோடாக் கம்பெனி என்ற பெயரில் தொடங்கிய கோடாக் 140 ஆண்டுகால வணிக வரலாற்றைக் கொண்டது. 1880-ஆம் ஆண்டில் ஜோர்ஜ் ஈஸ்ட்மென் என்பவர் புகைப்படங்களுக்கான படத் தட்டைகள் (பிளேட்ஸ்) தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.
சில ஆங்கிலப் படங்களில் அந்தக் காலத்தில் இதுபோன்ற தட்டைகளைப் பயன்படுத்திப் படம் எடுக்கும் காட்சிகளை நாம் பார்க்க முடியும்.
அதைத் தொடர்ந்து அந்தப் புகைப்படப் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு 1892-இல் ஈஸ்ட்மேன் கோடாக் என்ற பெயரையும் சூட்டினார் ஈஸ்ட்மேன்.
அந்தக் காலத்தில் வெளிவந்த தமிழ்ப் படங்களின் விளம்பரங்களில் ‘ஈஸ்ட்மேன் கலர்’ என்ற முத்திரை காணப்படும். அத்தகையப் படங்களுக்கான திரைப்படச் சுருள்களைத் தயாரித்ததும் கோடாக் நிறுவனம்தான்!
மின்னிலக்க புகைப்படத் துறையின் தாக்கத்தால் பெரும் இழப்பை எதிர்நோக்கிய கோடாக் 2012-இல் திவால் நிலையை அறிவித்தது.
மீண்டும் புத்துயிர் பெறும் முயற்சியில் இராசயனப் பொருட்களைத் தயாரிக்கும் வணிகத்தில் ஈடுபட்டது கோடாக்.
இராசயனப் பொருட்கள் உற்பத்தியில் அரசாங்க உதவியும் தற்போது கிடைத்திருப்பதால் கோடாக் பங்குகள் 530 விழுக்காடு வரை விலை உயர்ந்தன.
1888-ஆம் ஆண்டிலேயே முதல் புகைப்படக் கருவியை ஈஸ்ட்மேன் அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு பல்வேறு கட்டங்களில் புகைப்படத் துறையில் பல்வேறு புரட்சிகளை நிகழ்த்திக் காட்டியது கோடாக்.
1888-ஆம் ஆண்டில் மருந்து தயாரிப்புத் தொழில்களிலும் ஈடுபடத் தொடங்கியது கோடாக்.
கால ஓட்டத்தில் புகைப்படத் தொழிலில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததும் திவால் நிலைக்கு ஆளாகியதும் கோடாக்கின் இன்னொரு வரலாற்றுப் பக்கமாகும்.