கோலாலம்பூர்: 1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கையை திருத்திய குற்றச்சாட்டை இரத்து செய்ய நஜிப் ரசாக் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
67 வயதான நஜிப் மீதான குற்றச்சாட்டு போல், அது குழப்பமானதல்ல என்பதைக் கண்டறிந்த நீதிபதி முகமட் சைனி மஸ்லான் இந்த முடிவை எடுத்தார்.
“விண்ணப்பதாரர் (நஜிப்) அளித்த காரணங்கள் வழக்கின் முடிவில் மட்டுமே கருதப்பட வேண்டும். தொடக்கக் கட்டத்தில் நீதிமன்றம் காரணத்தை (குற்றச்சாட்டை இரத்து செய்ய) பரிசீலிப்பது முறையல்ல , “என்று அவர் கூறினார்.
67 வயதான நஜிப், 1எம்டிபி தணிக்கை அறிக்கையை திருத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். அது ஆதாரமற்றது என்றும், தம்மீதான ஒடுக்குமுறை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
2016 பிப்ரவரி 22 முதல் 26 வரை பிரதமர் துறை வளாகத்தில், மத்திய அரசு நிர்வாக மையத்தில், நஜிப் இந்த குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009- இன் பிரிவு 23 (1)- இன் கீழ் அவர் மீது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சப் பணத்திலிருந்து ஐந்து மடங்கு குறையாத அல்லது 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.