கோலாலம்பூர் : 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” பாடல் திறன் போட்டியின் அரையிறுதிச் சுற்று, கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி இருபது போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்தேறியது.
ஆர்டிஎம் (RTM) அங்காசாபூரியில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடபெற்றது.
நம் நாட்டின் இசைத் துறையில் திறமை வாய்ந்த இளையோர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய நோக்கத்தில் ஆர்டிஎம் (RTM), மின்னல் பண்பலையோடு இணைந்து இப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்ற போட்டியாளர்கள், தமிழ் மொழி மட்டுமல்லாது மலாய் மொழியிலும் தங்களது பாடும் திறனை வெளிக்கொணர இப்போட்டி ஒரு களமாக அமைந்தது.
இந்த அரையிறுதிச் சுற்று, காலையில் பத்து போட்டியாளர்கள், மதியம் பத்து போட்டியாளர்கள் என இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. இப்போட்டியின் நடுவர்களாக நாட்டின் பிரபல இசையமைப்பாளர் திரு ஜெய், முன்னணி பாடகி திருமதி ஷர்மிளா சிவகுரு, ஆர்டிஎம் இசைப் பிரிவைச் சேர்ந்த திரு லுக்மான் அப்துல் அஸீஸ் மற்றும் யாங் மூலியா (Yang Mulia) ராஜா முகமது ஷாம் ராஜா சாரி ஆகியோர் பணியாற்றினர்.
முதல் பகுதியில் போட்டியிட்ட மூன்று போட்டியாளர்களும், இரண்டாம் பகுதியில் போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்களும் “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வுப் பெற்றனர்.
இப்போட்டியின் முதல் போட்டியாளரான மிஷல் கிரேஸ் பிரான்சிஸ் சிரம்பானைச் சேர்ந்தவர். சிறு வயது முதல் தேவாலய பாடல் குழுவில் பாடி தனது பாடல் திறனை வளர்த்துக் கொண்டதோடு ‘யூக்கலெலி’ இசைக் கருவியை வாசிப்பதிலும் திறன் பெற்றவர். இவர் ‘ரஹத்துல்லா ரஹத்துல்லா’ மற்றும் ‘கு மீலிக்’ பாடல்களைப் பாடி இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்.
பேராக் பீடோரைச் சேர்ந்த நான்காவது போட்டியாளரான பிரவீன் நடராஜன் பாடுவதோடு புல்லாங்குழல் மற்றும் சாக்சபோன் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை பெற்றவர். இவர் ‘ஒரு முறைதான்’ மற்றும் ‘சும்பா’ பாடல்களை பாடி, நான்கு நடுவர்களையும் கவர்ந்து இறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாய் நுழைந்துள்ளார்.
தலைநகர், ஸ்தாப்பாக்கைச் சேர்ந்த காயத்ரி தாமோதரனின் மேடை அனுபவம் நான்கு வயதில் தொடங்கியுள்ளது. பல பாடல் போட்டிகளில் இவர் பங்கு பெற்றிருந்தாலும் “மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” மேடை தனக்கு புது அனுபவத்தை தந்துள்ளதாக கூறினார். காயத்ரி பாடிய ‘குங்கும வண்ணத்தோடு மங்கை வெண்ணிலா’ மற்றும் ‘ரிண்டு’ பாடல்கள் இவரை இறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாய் நகர்த்தியுள்ளது.
“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” போட்டியின் இளம் போட்டியாளரான ரூஹன் ரவிந்திரன் பகாங், குவாந்தானைப் பிறப்பிடமாக கொண்டவர். இவருக்கு பதினெட்டே வயதென்றாலும், தனது அழகான தமிழ் உச்சரிப்போடு இவர் பாடிய ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ மற்றும் ‘ஈங்கின் பெர்சுவா’ பாடல்கள் இப்போட்டியின் நடுவர்களை மிகவும் கவர்ந்து, இவரை இறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாய் நகர்த்தியுள்ளது.
மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவரான தனசேகரன் மனோகரன், பேராக் ஆயர் தாவாரைச் சேர்ந்தவர். இவர் பாடிய உள்ளூர் பாடலான ‘பாதி நிலவு பாதி கதிர்’ மற்றும் ‘சுவாராமு ஷாயிர்க்கு’ பாடல்கள் இறுதிச் சுற்றுக்கு இவரை தகுதிபெறச் செய்துள்ளது.
ஜோகூர் உலுதிராமை சேர்ந்த அருளினி ஆறுமுகம், தனது பாடல் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு புதிய அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இப்போட்டி அமைந்ததாக கூறினார். தேசிய விருதுப் பெற்ற ‘முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்’ மற்றும் ‘சாங்கோங்’ பாடல்களைப் பாடி இவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்றுள்ளார்.
பேராக் ஈப்போவை சேர்ந்த உயிரியல் துறை மாணவியான திவியாஷினி பிரபாகரன், தான் பாடுவதன் வழி பாடகராக வேண்டும் என்ற தனது தாயின் இளம்பிராய கனவையும் நனவாக்க இக்களத்திற்கு வந்ததாக கூறியிருந்தார். தாய்க்கும் சேர்த்தே பாடுவதாக கூறினார். அரையிறுதிச் சுற்றுக்குத் இவர் தேர்வு செய்து பாடிய ‘வான் மேகம்’ மற்றும் ‘ஜோகெட் பகாங்’ பாடல்கள் இவரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெறச் செய்துள்ளது.
சிலாங்கூர் ரவாங்கைச் சேர்ந்த ஜெயபார்கவி சந்திரராவ், சிறு வயது முதலே பல மேடைகளில் பாடி வந்தாலும், தனது பாடல்களின் வழி அனைவரையும் மகிழ்ச்சி படுத்துவதே தனது முக்கிய குறிக்கோள் எனக் கூறினார். இவர் தேர்ந்தெடுத்து பாடிய ‘ராசாவே உன்னை நம்பி’ மற்றும் ‘கு பெர்சுவாரா’ பாடல்கள் நடுவர்களை கவர்ந்து இவரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறச் செய்துள்ளது.
இவ்வேளையில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் மின்னல் பண்பலை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
“மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020” இறுதிச் சுற்று எதிர்வரும் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி சனிக்கிழமை, அங்காசாபூரியின் ஆடிட்டேரியம் பெர்டானாவில் நடைபெறவுள்ளது. நேயர்கள் இப்போட்டியை TV2-இல் நேரலையாக கண்டுக்களிக்கலாம். மேலும் இப்போட்டி குறித்த அண்மைய நிலவரங்களை தெரிந்து கொள்ள மின்னல் பண்பலையின் சமூக வலைத்தளங்களை பின் தொடரலாம்.
Instagram: @minnalfm_malaysia
Facebook: @RTMMINNALfm
YouTube: @MinnalfmRTM
Twitter: @MINNALfm