கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று கொவிட்19 குறித்த சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
“நாளை (அக்டோபர் 3) பிரதமரே கொவிட்19- இன் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கைகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் நேற்று டுவிட்டரில் சுருக்கமாகக் கூறினார்.
நேற்று, மலேசிய வரலாற்றில் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. 287 புதியசம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை கெடா (129), சபா (113) மற்றும் சிலாங்கூர் (31) ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டவையாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இது மிக உயர்ந்த தினசரி கொவிட்19 தொற்று எண்ணிக்கையாகும்.
நேற்று மட்டும் 81 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,095-ஆக உயர்ந்தது.
இன்னும் 1,540 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
மரணம் எண்ணிக்கை தொடர்ந்து 136-ஆக உள்ளது.