புதுடில்லி : 10 ஆயிரம் அடிக்கும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிக நீண்ட சாலை வழி சுரங்கப் பாதையை நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 3) இமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக அந்தச் சுரங்கப்பாதைக்கு “அடல் சுரங்கப் பாதை” (Atal Tunnel) என மோடி பெயர் சூட்டினார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் இருந்து லாஹால் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரையிலான சாலைகளை இணைக்கும் இந்த சுரங்கப் பாதை மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
10 ஆயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரமான மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் சுரங்கப் பாதைகளிலேயே இதுவே மிக நீளமான சுரங்கப் பாதையாகும்.
சீனாவுடனான எல்லைப் பகுதியில் போர்மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்த சுரங்கப்பாதை வட்டார முக்கியத்துவமும், இராணுவ முக்கியத்துவமும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சுரங்கப் பாதை திறக்கப்பட்டதும், அடுத்த சில மணி நேரத்திலேயே அதில் பயணம் செய்த அனுபவத்தை பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்தப் பகுதியில் திரைப்படப் படப்பிடிப்புக்காக சென்றிருப்பதாகவும், அந்த சுரங்கப் பாதையில் முதல் நாளிலேயே பயணம் செய்யும் அதிர்ஷ்டத்தைத் தான் பெற்றதாகவும் பிரியதர்ஷன் தெரிவித்தார்.
மலைகள் சூழ அழகிய சுற்றுச் சூழல் காட்சிகளுடன் அமைந்திருக்கும் அந்த சுரங்கப் பாதையின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: