ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில செயல்பாட்டு அறை தரவுகளின்படி, நேற்றைய 14 புதிய கொவிட்19 சம்பவங்களுடன் கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது.
தரவுகளின் அடிப்படையில், ஹுலு லாங்காட்டில் ஒன்பது சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பெட்டாலிங் (நான்கு), சிப்பாங் (மூன்று) மற்றும் கோம்பாக் (ஒன்று) சம்பவங்களும் பதிவாகி, சிலாங்கூரின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கையை 31- ஆக உயர்த்தியது.
சமீபத்திய பாதிப்பு நிலைமைக்கு சமூகத்தின் பொறுப்புணர்வு மனப்பான்மை தேவைப்படுகிறது என்று சிலாங்கூர் கொவிட்19 தடுப்பு பணிக்குழு கூறியது.
“நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவது மிகவும் முக்கியமானது மற்றும் கொவிட்19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கியமான திறவுகோலாகும்.
“தயவுசெய்து தனிமைப்படுத்தல், முகக்கவசம் அணிவது, வழக்கமாக கை கழுவுதல் போன்றவற்றை பேணவும்” என்று முகநூல் வழியாக அது கூறியது.
சிலாங்கூரில் நேற்று 31 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், மொத்தம் 2,378 சம்பவங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று, நாட்டில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 293- ஆக பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இவற்றில் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். மற்ற 292 தொற்றுகளும் உள்நாட்டிலேயே காணப்பட்டவையாகும்.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 12,381 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை 67 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,283 ஆக உயர்ந்தது.
இன்னும் 1,961 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 28 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.