கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வின் முடிவில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் உள்ள சிவப்பு மண்டலத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை அனைத்து ஊழியர்களையும் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 முதல் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.
அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குச் சென்று பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
“இந்த மாநிலங்கள் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சபா), நகரங்களில் நேர்மறையான கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்துவரும் போக்கைப் பார்க்கும்போது, இந்த பகுதி சம்பந்தப்பட்ட இயக்கத்திற்கு கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டும்.
“சிலாங்கூர் மாநிலத்தில் இன்று வரை ஒன்பது தொற்றுக் குழுக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு முன்னர் அறிவித்தது.
“எனவே, சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில், இன்றைய சிறப்பு அமர்வில், பொதுத்துறை ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கு வர தேவையில்லை. வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று ஒப்புக் கொண்டது,” என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இடங்களில் இருந்து 1 மில்லியன் தொழிலாளர்களைக் குறைக்கும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
“இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய ஒவ்வொரு ஊழியருக்கும் பயண வெளியீட்டு கடிதத்தை வழங்குமாறு முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.