கோலாலம்பூர்: அரசியல் பேச்சுகள் நின்றுவிட்டதாகத் தோன்றும் இந்நேரத்தில், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் நாளை வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டம் அவர்களின் வழக்கமான சந்திப்பு இடத்தில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடைபெறும் என்றும், அக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணியின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
கடைசியாக இந்தக் கூட்டம் கடந்த மாதம், சபா மாநிலத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்தது.
அந்த நேரத்துடன் ஒப்பிடும்போது, அரசியல் சூழ்நிலை இப்போது நிறைய மாறிவிட்டது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய பின்னர், தேசிய கூட்டணி அரசாங்கம் அவசரகால உத்தரவை அமல்படுத்த முயன்றது, ஆனால் மாமன்னர் அதனை நிராகரித்தார்.
மாமன்னரின் நிராகரிப்பை பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஒரு அடியாக சிலர் கருதுகின்றனர்.
நவம்பர் 2- ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போது தேசிய கூட்டணி ஆட்சியில் இருக்குமா என்ற வதந்திகளும் எழுந்துள்ளன.