Home One Line P1 சரவணன் முயற்சியில் உருவான லிட்டல் இந்தியா : 10 ஆண்டுகால வெற்றிப் பயணம்

சரவணன் முயற்சியில் உருவான லிட்டல் இந்தியா : 10 ஆண்டுகால வெற்றிப் பயணம்

912
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தலைநகரில் கடந்த ஒரு நுற்றாண்டுக்கும் மேலாக இந்தியர்கள் அதிகமாக குடியிருந்த பகுதி பிரிக்பீல்ட்ஸ். அதன் காரணமாக இந்தியர் சார்ந்த பல்வேறு வணிகங்களும் இங்கே பல்லாண்டுகளாக இயங்கி வந்தன.

2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரிக்பீல்ட்ஸ் வணிகப் பகுதி லிட்டல் இந்தியாவாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் காணும் முயற்சிகளின் படலம் தொடங்கியது.

அப்போதைய கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம்.சரவணன் எண்ணத்தில் உதித்த இந்தத் திட்டம் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் வழிகாட்டுதலோடு பல மில்லியன் ரிங்கிட் செலவில் உருமாற்றம் காணத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா உருவாக்கத்திற்கு சரவணன் எடுத்த முயற்சிகளும், வழங்கிய பங்களிப்பும் அளப்பரியதாகும். அவற்றை இன்றைக்கு 10 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இங்குள்ள இந்திய வணிகர்களும், பயன்பெறும் மக்களும் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

இந்த லிட்டல் இந்தியா உருவாக்கத்திற்கு இடையூறாகவும், பிரச்சனைகளாகவும் இருந்த பல்வேறு விவகாரங்களை சரவணன் நேரடியாக அப்போது களத்தில் இறங்கி தீர்த்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியர்களின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் புதிய வரவேற்பு நுழைவாயில், கலை நயத்தோடு கூடிய அழகான அலங்கார வளைவுகள், அகலப்படுத்தப்பட்ட சாலைகள், புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதைகள், அலங்காரத் தூண்கள், இரவிலும் ஒளிபாய்ச்சிய அழகான வண்ண விளக்கு தோரணைகள், பூக்கடைகள் போன்ற சிறுதொழில் வணிகர்களுக்குமான வளாகங்கள் என முற்றிலும் புதிய தோற்றம் கண்டது பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா.

27 அக்டோபர் 2010-ஆம் நாள் கோலாகலத் திறப்பு விழா கண்டது லிட்டல் இந்தியா.

லிட்டில் இந்தியாவின் அன்றையத் திறப்பு விழாவைக் காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும், சுற்று வட்டார மக்களும், முக்கியப் பிரமுகர்களும் அலையென திரண்டனர்.

நகரத்தின் நடுவில் இந்திய பாரம்பரியம், கலை கலாச்சாரம் நிறைந்த கண்கொள்ளாக் காட்சியகமாக கம்பீரமாகத் திகழ்கிறது லிட்டல் இந்தியா.

நேற்று செவ்வாய்க்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

அந்த நாளை நினைவு கூரும் விதமாக பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு சிறப்பு வருகை தந்தனர் சரவணனும், கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான டான்ஸ்ரீ அனுவார் மூசாவும்.

அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு வருகையளித்து, உணவருந்தியதோடு, பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியின் வளர்ச்சியையும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வளாகத்தின் அழகிய காட்சிகளையும், நேற்று அமைச்சர்கள் சரவணன், அனுவார் மூசா அந்தப் பகுதிக்கு மேற்கொண்ட வருகை தொடர்பான படக்காட்சிகளையும் இங்கே காணலாம்: