Home One Line P1 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தாமான் மெலாவாத்தியில் விபத்து – 2 பேர் மரணம்

2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தாமான் மெலாவாத்தியில் விபத்து – 2 பேர் மரணம்

677
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சுபாங் விமான நிலையத்திலிருந்து கெந்திங் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நடுவானில் மோதிக் கொண்டு தாமான் மெலாவாத்தி பகுதியில் விபத்துக்குள்ளாயின.

தாமான் மெலாவாத்தி பகுதியில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளியின் பின்புறத்திலுள்ள வீடமைப்புப் பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்து ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரையிறங்க முடிந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் சுபாங் விமான நிலையத்திலிருந்து காலை 11.11 மணியளவில் புறப்பட்டன. 22 நிமிடங்கள் கழித்து விபத்து நேர்ந்தது. 1,300 அடி உயரத்தில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.

#TamilSchoolmychoice

உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினரோடு கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அஸ்மின் அலியும் அங்கு காணப்பட்டார்.

புக்கிட் அந்தாராபங்சா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு அந்த சம்பவம் குறித்து தகவல் தரப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்ததாகவும் அஸ்மின் அலி தெரிவித்தார்.
தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளிக்கு அருகில் இருந்த திடலில் பத்திரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த மாஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அகமட் ஜவுகாரி யாஹ்யாவும் அவருடன் பயணம் செய்த டான் சாய் இயான் என்பவரும் காப்பாற்றப்பட்டனர்.

மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்து இருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

மரணமடைந்த இருவர் 56 வயது முகமட் சாப்ரி பகாரோம், 44 வயது முகமட் இர்பான் பிக்ரி முகமட் ராவி என அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்த முழு அறிக்கையை போக்குவரத்து அமைச்சு தயாரிக்கும் என போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.