Home One Line P2 “உலகத்திற்கே ஒளிகாட்டும் நாடாக மாறுவோம்” – ஜோ பைடன் வெற்றி உரை

“உலகத்திற்கே ஒளிகாட்டும் நாடாக மாறுவோம்” – ஜோ பைடன் வெற்றி உரை

634
0
SHARE
Ad

வில்மிங்டன் (டிலாவேர் மாநிலம்) : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன், அதைத் தொடர்ந்து தனது முதல் வெற்றி உரையை தனது பூர்வீக நகரான வில்மிங்டனில் இருந்து, துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுடன் இணைந்து வழங்கினார்.

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) காலை 9.45 மணியளவில் அவர் உரையாற்றினார். அவருக்கு முன்னதாக கமலா ஹாரிஸ் தனது வெற்றி உரையை வழங்கினார்.

#TamilSchoolmychoice

கமலா ஹாரிஸ் முதலில் உரையாற்றி முடிந்ததும் மேடையின் ஓரத்திலிருந்து தனது திடகாத்திர உடல் நிலையை எடுத்துக் காட்டும் வண்ணம் மெதுவாக ஓடிவந்து ஒலிபெருக்கி முன் நின்றார் ஜோ பைடன்.

அவரது வெற்றி உரையில் இடம் பெற்றிருந்த சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • இதுவரை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல்களில் எந்த அதிபருக்கும் கிடைக்காத அளவுக்கு மிக அதிகமான வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம். 74 மில்லியன் வாக்குகள் நமக்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இது மக்களின் வெற்றியாகும்.
  • நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் மக்களை பிளவுபடுத்த மாட்டேன். மாறாக ஒன்றுபடுத்துவேன்.
  • மாநிலங்களை ஜனநாயக கட்சிக்கு ஆதரவான நீலநிற மாநிலங்களாகவோ, குடியரசுக் கட்சிக்கு ஆதரவான சிவப்பு நிற மாநிலங்களாகவோ நான் பார்க்கப் போவதில்லை. மாறாக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைந்த அமெரிக்காவாக பார்க்கப் போகிறேன்.
  • அமெரிக்கா, நமது மக்களைப் பற்றியது. அமெரிக்காவின் மனசாட்சியை நாம் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.
  • நமது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
  • உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த வேண்டும். அதற்கு முதலில் இங்கே உள்நாட்டில் நாம் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும்.

மனைவிக்கு நன்றி

  • நான் பலமுறை கூறியபடி, ஜில் என்ற பெண்மணியின் கணவன் நான். அவரது அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால் நான் இங்கே இன்று நின்றிருக்க முடியாது. எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களின் தம்பதியருக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எனது உள்ளம் முழுவதும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
  • எனது மனைவி ஒரு சிறந்த தாயாக, ஒரு ராணுவ அதிகாரி போன்ற தாய்போல சிறந்த முறையில் கல்வி கற்பிப்பவராவார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் கல்விக்காக அர்ப்பணித்தவர். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உங்களில் ஒருவரைத்தான் முதல் பெண்மணியாகத் தேர்ந்தெடுத்து நீங்கள் வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறீர்கள்.

கமலா ஹாரிசுடன் பணியாற்ற கிடைத்த கௌரவம்

  • ஒரு மிகச் சிறந்த துணை அதிபராக திகழப்போகும் கமலா ஹாரிசுடன் இணைந்து பணியாற்றும் கௌரவத்தையும் நான் பெரிதும் மதிக்கின்றேன். முதல் பெண் துணை அதிபராக, முதல் கறுப்பினப் பெண்மணியாக, முதல் தெற்கு ஆசிய வம்சாவளியினராக அவர் அந்த உயரிய பதவியில் அமரவிருக்கிறார்.
  • அமெரிக்காவில் குடியேறிய மக்களில் இருந்து மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண்மணியாக அவர் திகழ்கிறார். நீண்டகாலமாக அமெரிக்காவில் இந்த மாற்றம் நிகழ்வதற்கு நாம் காத்திருந்தோம். கமலாவும் அவரது கணவரும் என் குடும்பத்தில் ஒரு அங்கமாக இப்போது இணைந்து விட்டனர்.
  • எனது வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து இன மக்களின் ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக எனக்காகத் துணை நின்ற ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடுவேன்.
  • நான் எப்போதும் பிரச்சாரத்தின்போது கூறியபடி எனது பிரச்சாரம் அமெரிக்கா முழுவதையும் பிரதிநிதித்து நடத்தப்பட்டது. இப்பொழுது நான் அமைக்கப் போகும் நிர்வாகமும் அமெரிக்கா முழுவதையும் பிரதிநிதித்து அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்பை ஆதரித்து வாக்களித்த அனைவரின் ஏமாற்றத்தை நான் உணர்கிறேன். நானே கடந்த காலங்களில் சில தேர்தல்களில் தோல்வி அடைந்து இருக்கின்றேன்.
  • இப்பொழுது நாம் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொள்ளும் தருணமாகும். கடந்தகால பிரச்சாரங்களின் வெப்பத்தை தற்போது தணிப்போம். பிரச்சாரங்களின்போது நாம் பரிமாறிக்கொண்ட கடுமையான வார்த்தைகளை ஒதுக்கி வைப்போம். ஒருவரையொருவர் மீண்டும் பார்த்துக் கொள்வோம். ஒருவர் கருத்துக்களை மற்றொருவர் பொறுமையுடன் கேட்டு தெரிந்து கொள்வோம்.
  • நாம் முன்னேற வேண்டுமானால் நமது அரசியல் எதிர்ப்பாளர்களை எதிரிகளாகக் கருதுவதை நிறுத்தவேண்டும். நாம் எதிரிகள் அல்ல! நாம் அனைவரும் அமெரிக்கர்கள்!
  • பைபிளில் ஓர் அழகான வாசகம் வரும். எல்லாவற்றுக்குமே ஒரு பருவ காலம் உண்டு. கட்டுவதற்கு ஒரு காலம்; அறுவடை செய்வதற்கு ஒரு காலம்; விதைப்பதற்கு ஒரு காலம்; காயங்கள் ஆறுவதற்கு ஒரு காலம் என்று அந்த வாசகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
  • இப்பொழுது அமெரிக்காவில் நமது காயங்கள் ஆறுவதற்கான காலம்.
  • நமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்ன? அனைவரையும் மரியாதையுடனும் சரிசமமாகவும் நடத்தவேண்டிய அதிகாரத்தை நமக்கு மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். அறிவியலைப் பயன்படுத்துவதோடு நம்பகத்தன்மையையும் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள்.
  • கொவிட் நச்சுயிரிக்கு எதிரான போராட்டம்; வளர்ச்சியை நோக்கிய போராட்டம்; குடும்பத்தினரின் சுகாதாரத்தை பேணிக் காக்கும் போராட்டம்; இனங்களுக்கிடையில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்; நமது நாட்டில் ஊடுருவியிருக்கும் இனவெறியைத் துடைத் தொழிக்கும் போராட்டம்; நமது பூமியின் பருவநிலை மாற்றங்களை பாதுகாக்கும் போராட்டம்; இப்படியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்கவே நமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஒருவருக்கொருவர் இடையிலான மரியாதையைத் தற்காத்துக் கொள்ளவும் ஜனநாயகத்தை பாதுகாக்கப் போராடவும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்.
  • நமது முதல் பணி கொவிட்-19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போராட்டமாகும். இந்த கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி அடையாமல் நமது பொருளாதாரத்தை நாம் சீர்ப்படுத்த முடியாது. நமது வாழ்க்கையின் மிக முக்கியமான சம்பவங்களை குறிப்பாக நமது பேரக்குழந்தைகளை கட்டியணைப்பது, பிறந்தநாள் திருமணங்கள், பல்கலைக் கழகப் பட்டம் பெறும் கொண்டாட்டங்கள், போன்ற நமது வாழ்க்கையின் சிறந்த தருணங்களை நாம் கொண்டாடி மகிழ முடியாது.
  • கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தைச் செயல்படுத்தும் முதல் பணியாகவும் அதற்கான முன் வரைவு திட்டத்தை எனது பதவிக்காலத்தில் அமல் படுத்துவதற்காகவும் அடுத்த திங்கட்கிழமை அன்றே (நவம்பர் 9) முன்னணி அறிவியலாளர்களையும், சுகாதார நிபுணர்களையும் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவை நான் அறிவிக்கப் போகிறேன்.
  • முழுக்க முழுக்க அறிவியலின் அடிப்படையில் இந்த குழு செயல்படும்.
  • பெருமைக்குரிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நான் போட்டியிட்டேன். இனி அனைத்து அமெரிக்காவுக்குமான அதிபராக செயலாற்றுவேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றுவேன்.
  • இன்று அகில உலகமும் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு சிறந்த அமெரிக்கா நாடு உலகத்திற்கே ஒளிகாட்டும் நாடாக செயல்பட முடியும்.

-செல்லியல் தொகுப்பு