Home உலகம் கமலா ஹாரிஸ் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபரா?

கமலா ஹாரிஸ் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபரா?

185
0
SHARE
Ad
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் (கோப்புப் படம்)

வாஷிங்டன் — அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அன்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஒருவழியாக அறிவித்தார். பைடனின் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல் மிகவும் தாமதமாக நடந்தது என்றும் கடந்த 50 ஆண்டுகளில்  “முன்னெப்போதும் இல்லாத” நிகழ்வு என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தனது விலகலை அறிவிக்கும்போது, பைடன் இன்னும் சுமார் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு தனது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை பகிரங்கமாக ஆதரித்தார்.

தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் உத்தேச வேட்பாளர் என்ற நிலையிலிருந்து அவர் விலகியது, சமீப வாரங்களில் அவரது கட்சிக்குள்ளிருந்து பதவி விலக அழுத்தம் அதிகரித்த சூழலில்  நடந்தது. அதே சமயம், கருத்துக் கணிப்புகள் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பை பைடன் தோற்கடிக்கும் வாய்ப்பு குறைந்து வருவதைக் காட்டின.

#TamilSchoolmychoice

பல ஜனநாயகக் கட்சியினர் அதன் பின்னர் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை பகிரங்கமாக அளித்துள்ளனர். எனினும், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி போன்ற சில முக்கிய அரசியல் தலைவர்கள் மௌனமாக உள்ளனர்.

இந்த எதிர்பாராத திருப்பம் அமெரிக்க அரசியலில் பரபரப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1968-க்குப் பின் நடக்கும் அரசியல் திருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து கடைசி நிமிட விலகல் இதற்கு முன்னர் 1968-இல் நடந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பதவியில் இருந்த அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பதவிக்கான முன்னணி வேட்பாளருமான லிண்டன் ஜான்சன், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார்.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மாநாட்டில், நவம்பர் தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட பதவியில் இருந்த துணை அதிபர் ஹூபர்ட் ஹம்ப்ரியை கட்சி தேர்வு செய்தது. அவர் குடியரசுக் கட்சியின் ரிச்சர்ட் நிக்சனிடம் தோல்வியடைந்தார்.

எனினும், பைடனால் முடியாததை ஜனநாயகக் கட்சிக்கு ஹாரிஸால் கொண்டுவர முடியும் என்பதுதான் இப்போதைய அரசியல் யதார்த்தம். சில சாதகங்களை அவர் கொண்டிருக்கிறார். பராக் ஒபாமாவுக்குப் பிறகு இரண்டாவதாக அதிபர் தேர்தலில் குதிக்கும் கறுப்பின இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் – வெற்றி பெற்றால் முதல் பெண் அமெரிக்க அதிபர் – முதல் இந்திய வம்சாவளி இனத்தவர் – ஆகியவையே அந்த சாதகங்கள்.

பைடனுடன் ஒப்பிடும்போது இந்த கறுப்பின, இந்திய, ஆசிய சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பை கமலா பெற்றிருக்கிறார்

59 வயதான அவர் 81 வயதான பைடனை விட ஆரோக்கியமாகத் தோன்றுகிறார் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.