மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
ஒவ்வோர் ஆண்டும் மலேசிய இந்தியர்களின் தீபாவளி, உற்சாகமும் மகிழ்ச்சியும் களைகட்டும் தீபாவளியாகக் கொண்டாடப்படும். இந்தியர்களின் வணிக மையங்களில் திரளாக, முட்டி மோதிக் கொள்ளும் வண்ணம் கூட்டம் இருக்கும். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். பல இன மக்கள் நிறைந்த திறந்த இல்ல உபசரிப்புகள் என மலேசிய இந்தியர்களுக்கே உரிய தேசியத் திருவிழாவாக தீபாவளி கொண்டாடப்படும்.
நமது மனங்களில் மட்டும் மகிழ்ச்சியைக் கொண்டுவராமல், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் நம்பிக்கை ஒளி ஏற்றும் வண்ணம் நாம் தீபாவளியைக் கொண்டாடி வந்திருக்கிறோம். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதத்திலும், நாம் தீபாவளியைக் கொண்டாடி வந்திருக்கிறோம்.
நமது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் அதே வேளையில் வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலும் அவர்களை நினைவுகூர்ந்து நமது தீபாவளியைக் கொண்டாடுவது நமது பாரம்பரிய வழக்கம். அந்தக் கடமையை நாம் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வந்துள்ளோம்.
மஇகா தலைமையகம் மூலமும், பல மஇகா கிளைகளின் மூலமும், பல இந்திய அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகள் மூலமும் வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் பணிகளை நாம் தீபாவளியின்போது நிறைவேற்றியிருக்கிறோம். இந்தப் பணிகளை நாம் தொடர்ந்து செய்து வருவோம்.
நமக்காகப் பல தியாகங்களைச் செய்த நமது மூதாதையரை நினைவு கூர்ந்துக் கொண்டாடுவதும், நமது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதும் தீபாவளியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதற்காக நாம் நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருடன் இணைய பயணங்கள் மேற்கொள்வதும் வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் நமக்கு எல்லாமே மாறிவிட்டது. நரகாசுரன் என்ற அரக்கனை ஶ்ரீ கிருஷ்ண கடவுள் அழித்ததைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்பது பாரம்பரியமாக நாம் நம்புகின்ற புராணக் கதையாகும். ஆனால், இந்த முறை உண்மையிலேயே நம் கண் முன்னே தோன்றி பல உயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற அரக்கனை ஒழிப்பதற்காக நமது அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளின் காரணமாக, நமது தீபாவளிக் கொண்டாட்டத்தின் அளவையும் நாம் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆலயங்களுக்குச் செல்வதற்கான நேரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஒருதடவை இத்தனை பேர்தான் வழிபாடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
நமது இல்லங்களின் விசால அளவைப் பொறுத்து தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையோடு நடத்தப்பட வேண்டும். சுகாதார அம்சங்களில் எல்லா நிபந்தனைகளும் தரக் கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், இதற்காக நாம் நமது நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. நமது உற்சாக உணர்வுகளை நாம் கைவிட்டு விடக் கூடாது.
இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தின் அளவு குறைந்திருக்கலாம். குடும்பத்தினரிடையே சில பிரிவுகளும் நமக்கு இருக்கலாம். ஆனால் நமது அன்புக்குரியவர்களையும், நமது சக மலேசிய சகோதரர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நமக்குத் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பல உயிர்களை கொவிட்-19 அரக்கன் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்மிடையே பல குடும்பத்தினர் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து கொண்டிருக்கும் நிலையில், மலேசிய இந்திய சமூகமும் தன் பங்குக்கு சில தியாகங்களைச் செய்ய முன்வரவேண்டும்.
கொவிட் 19-க்கு எதிராக அரசாங்கம் நடத்தும் போராட்டத்தில் நமது பங்களிப்பையும் நாம் வழங்கும் நோக்கில் நமது தீபாவளி கொண்டாட்டத்தின் அளவை நாம் சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.
எனினும், தீபாவளியின் உயரிய, உண்மையான நோக்கத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. தேவைப்படுவோருக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் உதவுவதுதான் அந்த நோக்கமாகும். தீபாவளியை பாரம்பரியமாகவும், முறைப்படியும் கொண்டாடும் அதே வேளையில் இந்த நல்ல நோக்கத்தையும் நாம் தொடர்ந்து செயல்படுத்தி வரவேண்டும்.
தீமையை நன்மை ஒழித்தது, அரக்கனை கடவுள் அழித்து வெற்றி பெற்று மக்களைக் காத்தார் என்பதுதான் தீபாவளியின் சித்தாந்தம்.
அதையே இந்த நவீன காலத்தில் எடுத்துக் காட்டும் வண்ணம் கொவிட்-19 என்ற அரக்கனை ஒழித்துக்கட்டுவதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு அரசாங்கம் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நமது முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.