Home One Line P1 “ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

“ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

446
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டில் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக அனைவருக்கும் இருக்கும்.

தீபாவளி சந்தைகள் கிடையாது, தீபாவளி ஆரவாரம் கிடையாது, திறந்த இல்ல உபசரிப்பு கிடையாது, உற்றார் உறவினர் ஒன்று கூடல் கிடையாது.

ஆனால் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கி, பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, வீட்டில் விளக்கேற்றி இருளை விலக்கி ஒளிபரப்பச் செய்வோம்.

#TamilSchoolmychoice

உறவுகளை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், மனதளவில் இணைந்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்.

ஆக இந்த வருடம் மனித நேயத்துடன், நம்மிடம் உள்ளதை அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரோடும் பகிர்ந்து குறிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்து மகிழ்வோம். இதுநாள் வரை ஆடம்பரத் தீபாவளியாகக் கொண்டாடியிருக்கலாம். இன்று அந்த வசதி இல்லாமல் போகலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு சிக்கனமாக இந்த தீபாவளியை வரவேற்போம்.

அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு, முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு இருத்தல், போன்ற கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து சுகாதார முறையில் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்.

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை. அதோடு பொருளாதாரச் சிக்கல் வேறு. இதை எதிர் கொள்ள இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. நம்மை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ள நம்மிடம் உள்ள திறமைகளை, தொழில்திறன்களை மேம்படுத்திக் கொள்வோம். அரசாங்கத்தின் திட்டங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உழைப்பதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம்.

இப்படிப் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். மகிழ்ச்சியாய், கோலாகலமாய் கொண்டாடிய தருணங்களைச் சிந்தித்து பார்ப்போம். இந்த தருணத்தில் ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம் என்பதை உணர்வோம்.


தீபாவளியின் தத்துவம் இருள் நீங்கி ஒளி பிறக்கும், தீமை அழிந்து நன்மை பிறக்கும். அதே போல் கொரோனா நீங்கி சுதந்திரமாய் வாழும் நாள் தொலைவில் இல்லை என நம்புவோம்.


உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

தீப ஒளி செழிக்கட்டும்
திக்கெட்டும் பரவட்டும்
சோதனைகள் நீங்கட்டும்
சுதந்திரமாய் வாழட்டும்