கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசினின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ கட்சி போட்டியிடும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
மலேசிய இன்சைட் அறிக்கையின்படி, அம்னோ, அது வைத்திருந்த தொகுதிகளுக்கு போட்டியிடும் என்று துங்கு ரசாலி கூறியுள்ளார்.
“என் கொள்கை எளிதானது, எங்களுடையதில் நாங்கள் போட்டியிடுவோம். பாகோவும் லங்காவியும் எங்கள் தொகுதிகளாக இருந்தன, ”என்று அவர் கூறியுள்ளார்.
லங்காவி தொகுதியை தற்போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வகிக்கிறார்.
அம்னோ மற்றும் பெர்சாத்து ஆகியவை தொடர்ந்து இணைந்து பணியாற்றினால், மலாய்க்காரர்கள் தொகுதிகள் தொடர்பாக மோதுவது தவிர்க்க முடியாதது என்று துங்கு ரசாலி கூறினார்.
அம்னோவில் பலர் பெர்சாத்து உடன் பணிபுரிவது குறித்து சிந்தித்து வருவதாக அவர் கூறினார். கூட்டணியின் நன்மைகள் கேள்விக்குரியவையாக இருப்பதால் இந்த சந்தேக எழுந்துள்ளது.
“நாங்கள் இன்னும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். பெர்சாத்து உடன் இணைந்து நிற்பதால் நாம் என்ன பயன் பெறுகிறோம்? தொகுதிகளுக்காக நாங்கள் போராட வேண்டியிருக்கும், ” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசாவும், அடுத்த தேர்தல்களில் தேசிய முன்னணி தனது பாரம்பரிய இடங்களை பாதுகாக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.