Home One Line P2 “சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் கோபிநாத் – சில வித்தியாசங்கள்!

“சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் கோபிநாத் – சில வித்தியாசங்கள்!

717
0
SHARE
Ad

Selliyal | “Soorarai Potru” Nedumaran – Air Deccan G.R.Gopinath – What are the differences?
(“சூரரைப் போற்று நெடுமாறன் – ஏர் டெக்கான் ஜி.ஆர்.கோபிநாத் – சில வித்தியாசங்கள்!” என்ற தலைப்பில் 20 நவம்பர் 2020-இல் செல்லியல் காணொலித் தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)

ஓடிடி (OTT) எனப்படும் அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் கடந்த நவம்பர் 12-ஆம் வெளியாகி பரவலான பாராட்டுகளைக் குவித்து வருகிறது “சூரரைப் போற்று” திரைப்படம்.

ஏர் டெக்கான் மலிவு விலை விமான நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அவரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று போராட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது “சூரரைப் போற்று” திரைப்படம். அவரது கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மலிவு விலை விமான நிறுவனத்தைத் தொடக்க கோபிநாத் நடத்திய போராட்டங்களை அவர் Simply Fly: A Deccan Odyssey என்ற பெயரில் எழுதியிருந்தார். இந்த நூல் தமிழில் “வானமே எல்லை” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை திரைக்கதையின் விறுவிறுப்புக்காகவும், தமிழ்ப்பட இரசிகர்களின் இரசனைக்கேற்பவும் சூரரைப் போற்று படத்தில் பல இடங்களில் மாற்றியமைத்துள்ளார்.

படத்தின் கதைக்கும் அசல் கதாநாயகனான ஜி.ஆர்.கோபிநாத்தின் உண்மையான வாழ்க்கைக் கதைக்கும் இடையில் இருக்கும் சில வித்தியாசங்களை இங்கே பார்ப்போம்.

பெயர் மாற்றம்

முதலாவது வித்தியாசம் கதாநாயகனின் பெயர் மாற்றம். படத்தில் சூர்யாவுக்கு நெடுமாறன் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஏர் டெக்கான் தொடங்கியவரின் உண்மையான பெயர் ஜி.ஆர்.கோபிநாத்.

மாநிலப் பின்னணி

இரண்டாவது மாற்றம் படத்தின் கதாநாயகன் நெடுமாறன் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் கோபிநாத் கர்நாடக பிரதேச மாநிலத்தின் மைசூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள ஹாசான் மாவட்டத்தில் உள்ள கோரூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

குடும்பப் பின்னணி

நெடுமாறன் தமிழகத்தின் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவராகக் காட்டப்பட்டது. அவரது தந்தையார் ஒரு சமூகப் போராட்டவாதி என்பது போலவும் படத்தில் சித்தரிக்கப்பட்டது.

கோபிநாத்தின் தந்தையார் பெயர் ராமசாமி ஐயங்கார். அவரும் பள்ளி ஆசிரியர்தான் என்றாலும் கன்னட மொழி நாவலாசிரியர். கோபிநாத்தின் முழுப்பெயர் கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் என்பதாகும்.

எனவே, கோபிநாத்தின் உண்மையான குடும்பப் பின்னணி படத்தில் பெருமளவில் மாற்றப்பட்டிருக்கிறது.

விஜய் மல்லையாவுடனான மோதல்

சூரரைப் போற்று படத்தில் வரும் சில காட்சிகளில் விஜய் மல்லையாவை ஒத்த கதாபாத்திரம் ஒருவர் காட்டப்படுகிறார்.

தற்போது பெரும் கடனில் சிக்கி, இலண்டனில் நாடு கடந்து வாழும் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய வழக்கையும் எதிர்நோக்கி வருகிறார்.  ஒருகாலத்தில் கிங் பிஷர் என்ற மலிவுவிலை விமான நிறுவனத்தையும், அதே பெயரில் மதுபானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தியவர்.

விஜய் மல்லையாவுடன் கோபிநாத்

விஜய் மல்லையா ஒத்த கதாபாத்திரத்துடன் நெடுமாறன் மோதுவது போன்றும், அவரை எதிர்த்து நெடுமாறன் நடந்து கொள்வது போன்றும் காட்சிகள் சூரரைப் போற்று படத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நிஜவாழ்க்கையில் அதே விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்திற்கு தனது ஏர் டெக்கான் நிறுவனத்தை 2007-இல் விற்று விட்டார் கோபிநாத்.

இரு நிறுவனங்களும் இணைந்த பின்னர் கிங் பிஷர் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் கோபிநாத். 2010-ஆம் ஆண்டில்தான் கிங் பிஷர் இயக்குநர் வாரியத்திலிருந்து விலகினார் கோபிநாத்.

இந்த சம்பவங்கள் படத்தில் காட்டப்படவில்லை. படத்தின் கதைப்படி தனது முதல் ஏர் டெக்கான் விமானப் பயணத்தை நெடுமாறன் கதாபாத்திரம் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதுடன் படத்தை முடித்திருப்பதால் இந்தக் காட்சிகள் காட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் நாம் கருதலாம்.

கோபிநாத்தின் அரசியல் ஈடுபாடு

நிஜ வாழ்க்கையில் கோபிநாத் கொண்டிருந்த அரசியல் ஈடுபாட்டையும் சூரரைப் போற்று படத்தில் காட்டாமல் தவிர்த்து விட்டார்கள்.

அரசியல் இடையூறுகளையும், அரசாங்கத் தடங்கல்களையும் எதிர்த்துப் போராடுகிறார் படக் கதை நாயகனான நெடுமாறன்.

ஆனால் 2009-இல் கோபிநாத், பெங்களூர் (தெற்கு) நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

பின்னர் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டார் கோபிநாத். அப்போதும் தோல்வியடைந்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த 5 மாதங்களிலேயே அந்தக் கட்சியில் இருந்து விலகினார் கோபிநாத்.

கோபிநாத்தின் இந்த அரசியல் ஈடுபாடு படத்தில் காட்டப்படவில்லை. எனினும் கதைப்படி தனது ஏர் டெக்கான் முதல் விமானப் பயணத்தின் வெற்றியோடு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. அதற்குப் பின்னர்தான் கோபிநாத்தின் அரசியல் ஈடுபாடு தொடங்கியது. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட சம்பவங்களும் நடந்தது.

“சூரரைப் போற்று” படத்தை நிஜ நாயகன் கோபிநாத் பார்த்தாரா?

சரி! அசல் கதாநாயகன் கோபிநாத் “சூரரைப் போற்று” படத்தைப் பார்த்தாரா?

ஆம்! அவரும் படத்தைப் பார்த்து விட்டார்.

“படத்தின் திரைக்கதையில் நிறைய கற்பனைகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் எனது நூலின் உண்மையான உணர்வுகளை படத்தில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். விறுவிறுப்பான படைப்பாக திகழ்கிறது. சில இடங்களில் சிரிப்பதையும் சில இடங்களில் அழுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல சம்பவங்கள் எனது பழைய குடும்ப நினைவுகளைக் கிளறிவிட்டது” எனத் தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் கோபிநாத்.

-இரா.முத்தரசன்