Home One Line P1 கொவிட்19: முதற்கட்டமாக 6.4 மில்லியன் மலேசியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்

கொவிட்19: முதற்கட்டமாக 6.4 மில்லியன் மலேசியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 30 விழுக்காடு மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கு போதுமான கொவிட் -19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.

நோய்த்தடுப்பு கட்டாயமாக்க அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இல்லை என்றாலும், தடுப்பு மருந்துகள் மலேசியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு பின்னர் நிர்ணயிக்கப்படும் கட்டணத்திற்கு வழங்கப்படும்.

ஒரு விரிவான தடுப்பு மருந்து திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும். மேலும் உயர் ஆபத்து குழுக்களாகக் கருதப்படும், முன்னணி பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற பரிமாற்றமற்ற நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு முதலில் இது வழங்கப்படும்.

#TamilSchoolmychoice

“பின்னர், தடுப்பூசி மற்ற இலக்கு குழுக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என்று மொகிதின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நேற்று கூறினார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா, நவம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான பைசருடன் 12.8 மில்லியன் மருந்துகளைப் பெற முதற்கட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது 6.4 மில்லியன் மக்களுக்கு போதுமானதாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பைசர் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகள் வழங்க உள்ளது.

இரண்டாவது காலாண்டில் மேலும் 1.7 மில்லியன், மூன்றாம் காலாண்டில் 5.8 மில்லியன் மற்றும் நான்காம் காலாண்டில் 4.3 மில்லியன் மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

மலேசியாவின் மக்கள் தொகையில் மேலும் 10 சதவீதத்தினருக்கு தடுப்பூசிகளை வழங்க நவம்பர் 22- ஆம் தேதி கோவக்ஸ் நிறுவனத்துடன் அடாம் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மொகிதின் கூறினார்.