Home One Line P2 மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்

மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்

996
0
SHARE
Ad

selliyal | 5 memorable moments in Maradona’s life | 27 November 2020
“மராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்” என்ற தலைப்பில் செல்லியல் காணொலித் தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்

1986-ஆம் ஆண்டு. உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற தருணம். கால் இறுதி ஆட்டத்தில் காற்பந்து உலகின் பரம எதிரிகளான இங்கிலாந்தும், அர்ஜெண்டினாவும் மோதுகின்றன.

அர்ஜெண்டினாவின் தலைமை விளையாட்டாளராக – கேப்டனாக – காற்பந்து மைதானத்தில் நுழைகிறார் டியகோ மரடோனா என்ற 26 வயது இளம் சிங்கம்.  மெக்சிகோ சிட்டியின் அஸ்டெக்கா என்ற பிரம்மாண்டமான காற்பந்து அரங்கில் 114 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள் திரண்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

22 ஜூன் 1986-இல் நடைபெற்ற அந்த காற்பந்து ஆட்டம்தான் மராடோனோவை உலகப் புகழ் பெற வைத்தது. இன்று வரை காற்பந்து வரலாற்றின் பக்கங்களில் திரும்பத் திரும்ப எழுதப்படும் “கடவுளின் கை” என்ற கோல் அப்போதுதான் மராடோனோவால் இங்கிலாந்துக்கு எதிராகப் புகுத்தப்பட்டது.

அவர் தலையால் முட்டித் தள்ளிய அந்த கோல், அவரது கரம்பட்டு கோலானது என்ற சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. ஆட்டத்திற்குப் பின்னர் “கொஞ்சம் என் தலையும் கொஞ்சம்  கடவுளின் கையும் பட்டு அது கோலானது” எனக் கூறினார் மராடோனோ.

இன்று வரை “கடவுளின் கை” என்ற அந்த புகழ்பெற்ற சொற்றொடர் இலட்சக்கணக்கான தடவைகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. எழுதப்படுகின்றன.

மராடோனோவின் வாழ்க்கையை மாற்றியமைத்த மிக முக்கியத் தருணமாக அந்த சம்பவத்தைத்தான் கூற வேண்டும்.

ஒரே ஆட்டத்தில் இரண்டு சாதனை கோல்கள்

தனது முதல் கோல் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம், இரண்டாவது கோலை இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்திலேயே அடித்தார் மராடோனோ. மத்தியத் திடலிலிருந்து பல தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து சென்று மிக இலாவகமாக அவர் கோல் வலைக்குள் புகுத்திய அந்த இரண்டாவது கோல் இன்றுவரையில் காற்பந்து உலகின் மிகச் சிறந்த கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கோல் எண்ணிக்கையில் அந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வெற்றி கொண்டு 1986-ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் நுழைந்தது அர்ஜெண்டினா.

இன்னொரு முக்கியத் தருணம் – உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது

மராடோனோ வாழ்க்கையின் அடுத்த மிக முக்கியத் தருணம் அடுத்த சில நாட்களிலேயே நிகழ்ந்தது.

கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர், அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை வெற்றி கொண்டு இறுதி ஆட்டத்தில் நுழைந்தது அர்ஜெண்டினா. இறுதி ஆட்டத்தில் ஐரோப்பாவின் மற்றொரு காற்பந்து ஜாம்பவனான மேற்கு ஜெர்மனியைச் சந்தித்தது அர்ஜெண்டினா.

பரபரப்பான அந்த ஆட்டத்தில் மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கோல் எண்ணிக்கை பெரும்பான்மையில் மேற்கு ஜெர்மனியைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தையும் வெற்றி கொண்டது அர்ஜெண்டினா.

மராடோனோவின் விளையாட்டுத் திறனால் அர்ஜெண்டினா உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட அந்தத் தருணத்தை மராடோனா வாழ்க்கையின் இன்னொரு முக்கியத் தருணமாகக் கருதலாம்.

மராடோனா வாழ்க்கையின் முதல் முக்கியத் தருணம்

மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கியத் தருணங்களும் மராடோனா வாழ்க்கையைத் திசை திருப்பியிருந்தாலும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முதல் முக்கியத் தருணமாக 1982-ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம்.

ஆம்! அந்த ஆண்டில்தான் அவர் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அர்ஜெண்டினாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்டார்.

ஒரு சாதாரண தொழிற்சாலை ஊழியரின் மகனான மராடோனா தனது 16-வது வயதிலேயே அனைத்துலகக் காற்பந்து உலகில் விளையாடத் தொடங்கி விட்டார்.

1978-ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற போது மரடோனாவின் வயது 17. அப்போதே அவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மிகச்சிறிய வயது என்ற காரணத்தால் அர்ஜெண்டினா தேசியக் குழுவில் அவர் அப்போது சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனினும் அந்த ஆண்டில் உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாவே வெற்றி கொண்டது.

எந்த ஒரு காற்பந்து விளையாட்டாளருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் தனது நாட்டைப் பிரதிநிதித்து விளையாடுவதுதான்.

1978-இல் மராடோனாவுக்குக் கிடைக்காத அந்த வாய்ப்பு 1982-இல் அவருக்கு வாய்த்தது. மராடோனாவின் பங்கெடுத்த அந்த 1982-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள்தான் அவரது வாழ்க்கையின் முதல் முக்கியத் தருணமாகக் கருதலாம்.

எனினும் அந்த 1982-ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.

மராடோனாவின் சோகத் தருணம் – 1994 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டது

1986-இல் அர்ஜெண்டினா குழுவுக்குத் தலைமையேற்று உலகக் கிண்ணத்தை வென்று காட்டிய மராடோனா, அடுத்த 1990-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அர்ஜெண்டினா குழுவுக்குத் தலைமையேற்றார்.

எனினும் 30-வது வயதில் அவரால் முன்பு போல் அரங்கில் பிரகாசிக்க முடியவில்லை. இறுதி ஆட்டம் வரை வந்த அர்ஜெண்டினா அந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் தோல்வி கண்டது.

1994-ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் மராடோனா வாழ்க்கையின் நான்காவது முக்கியத் தருணமாகும். ஆனால் அதுவே அவரது சோகத் தருணமாகவும், அவரது காற்பந்து விளையாட்டு உலகின் இறங்குமுகத் தருணமாகவும் அமைந்து விட்டது.

இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய பின்னர் அவர் ஊக்க மருந்து உட்கொண்டார் என்ற காரணம் காட்டி காற்பந்து விளையாட்டிலிருந்து தடை செய்தது உலகக் காற்பந்து சம்மேளனம்.

அப்போது முதல் அவரது வீழ்ச்சியும் தொடங்கியது. மிதமிஞ்சிய போதைப் பழக்கம், மது அருந்துதல், அளவுக்கு மிஞ்சிய உணவுப் பழக்கம் ஆகியவற்றால் அவரது உடலும் நலிவுற்றது.

2000-ஆம் ஆண்டில் கோகேய்ன் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணத்தின் எல்லையைத் தொட்டுவிட்டு அதிர்ஷ்டவசமாக மீண்டார் மராடோனா.

மராடோனா வாழ்க்கையின் இன்னொரு முக்கியத் தருணம் – பிடல் காஸ்ட்ரோ நட்பு

பொதுவாக தென் அமெரிக்க மக்களின் அரசியல் நாயகர்கள் எப்போதும் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், ஜனநாயகப் போராளி சே குவாராவும்தான்!

மராடோனாவின் அரசியல் நாயகனும் பிடல் காஸ்ட்ரோதான். தனது இரண்டாவது தந்தை என்றுதான் காஸ்ட்ரோவை மராடோனா எப்போதும் குறிப்பிட்டார். காஸ்ட்ரோவின் முக உருவத்தையும் தனது கால் பகுதியில் பச்சை குத்தியிருந்தார் மராடோனா.

1986-இல் உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க ஆர்வம் காட்டினார் மராடோனா.

1987-இல் எந்தவித பந்தாவும் இன்றி கியூபாவில் மராடோனாவை உடனடியாகச் சந்தித்தார் பிடல் காஸ்ட்ரோ. அவருடன் சுமார் 3 மணி நேரம் செலவிட்டார். தனது அலுவலகத்திலேயே மராடோனாவுடன் பந்து விளையாடி மகிழ்ந்தார்.

அந்தச் சந்திப்பு மராடோனா வாழ்க்கையின் மறக்க முடியாத இன்னொரு அற்புதத் தருணம்.

அப்போது முதல் அவர்கள் இருவருக்குமான நட்பும் நல்லுறவும் தொடர்ந்தது. ஒருமுறை அரசியலில் ஈடுபடும்படி காஸ்ட்ரோ, மராடோனாவுக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் கூறுகிறார்கள்.

காஸ்ட்ரோவின் நட்பு காரணமாகத்தான் மராடோனா பின்னர் போதைப் பழக்கத்திலிருந்து மீள நான்கு ஆண்டுகள் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

காஸ்ட்ரோவுடனான நட்பு காரணமாக, 2005-ஆம் ஆண்டில் மராடோனா தனது அர்ஜெண்டினியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காஸ்ட்ரோவைப் பேட்டி கண்டு ஒளிபரப்பினார்.

2016-ஆம் ஆண்டில் காஸ்ட்ரோ மறைந்தபோது தாங்கிக் கொள்ள முடியாமல் தொடர்ந்து அழுததாக மராடோனா பின்னர் பேட்டி ஒன்றில் கூறினார்.

இப்படியாகத் தனது வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்களைக் கடந்து வந்த மராடோனா நவம்பர் 25-ஆம் தேதி தனது 60-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

மராடோனா தனது அரசியல் நாயகனாகப் போற்றிக் கொண்டாடிய அதே நவம்பர் 25-ஆம் தேதிதான் 2016-ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோவும் மறைந்தார் என்பது அவர்கள் இருவருக்கும் இடையிலான இன்னொரு சுவாரசியமான பொருத்தம்.

-இரா.முத்தரசன்