Home One Line P1 இந்திரா காந்தி வழக்கு : ஐஜிபி, 3 தரப்புகள் தற்காப்பு வாதம் சமர்ப்பிக்க உத்தரவு

இந்திரா காந்தி வழக்கு : ஐஜிபி, 3 தரப்புகள் தற்காப்பு வாதம் சமர்ப்பிக்க உத்தரவு

548
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திரா காந்தி வழக்குத் தொடர்பாக காவல் துறைத் தலைவர் மற்றும் மூன்று பிரதிவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வாதங்களுக்கான சத்தியப் பிரமாணங்களை (அபிடவிட்) சமர்ப்பிக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

அக்டோபர் 28-இல், இந்திரா காந்தி தேசிய காவல் துறைத் தலைவர் மலேசிய காவல் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் மலேசிய அரசு மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவைக் கண்டுபிடிக்க மறுத்ததற்காகவும், தனது மகள் பிரசன்னா டிக்சாவை மீட்டெடுக்கத் தவறியதாகவும் அவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

ரிட்சுவானால் கடத்திச் செல்லப்பட்ட பிரசன்னா டிக்சாவை மீட்க இந்திரா கடந்த சில வருடங்களாகவே போராடி வருகிறார்.

இன்று நடைபெற்ற இந்த வழக்கு நிர்வாகத்தின் முடிவை இந்திராவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் இன்று காலை உறுதிப்படுத்தினார்.

“நீதிமன்றம் பின்வரும் வழிமுறைகளை வழங்கியது. பிரதிவாதி டிசம்பர் 2 அல்லது அதற்கு முன்னர் தற்காப்பு வாத சத்தியப் பிரமாணத்தை சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 16 அன்று அல்லது அதற்கு முன்னர் அந்தத் தற்காப்பு வாத சத்தியப் பிரமாணத்திற்கு இந்திரா காந்தி தரப்பு பதிலளிக்க வேண்டும். அடுத்த வழக்கு நிர்வாகம் டிசம்பர் 30- க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மலேசியாகினியிடம்  கூறினார்.

ஜனவரி மாதம், தேசிய காவல் துறைத் தலைவர் இந்திராவின் முன்னாள் கணவர் ரிட்சுவானின் இருப்பிடம் தனக்குத் தெரியும் என்றும், அவரைச் சரணடையும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

பிரசன்னாவைக் கடத்திச் சென்ற ரிட்சுவானைத் தடுத்து வைக்க கூட்டரசு நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்த போதிலும் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.