கோலாலம்பூர்: நாட்டில் விவாகரத்து எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் திருமணங்களின் எண்ணிக்கை 1.2 விழுக்காடு குறைந்துள்ளது என்று புள்ளிவிவரத் துறை இன்று தெரிவித்துள்ளது.
தலைமை புள்ளிவிவர நிபுணர் முகமட் உசிர் மஹிடின் கூறுகையில், 2018-இல் 50,862 விவகாரத்து சம்பவங்களுடன் ஒப்பிடும்போதும், இந்த ஆண்டு 56,975 விவாகரத்துக்கள் நடந்துள்ளன என்று தெரிவித்தார். அதே நேரத்தில் திருமணங்கள் இந்த ஆண்டில் 203,821- ஆக குறைந்துள்ளன. முந்தைய ஆண்டு 206,352 திருமணங்கள் நடந்துள்ளன.
18 வயதிற்கு மேற்பட்ட திருமணமான ஆண்கள், ஆயிரம் மக்கள்தொகைக்கு ஆண்களுக்கான பொதுவான விவாகரத்து விகிதம் 6.5 விழுக்காட்டிலிருந்து 7.2 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
“இதேபோன்ற போக்கு பெண்களுக்கும் பதிவாகியுள்ளது. இது 16 வயதிற்கு மேற்பட்ட திருமணமான பெண்களின் ஆயிரம் மக்கள்தொகைக்கு 7.0 விழுக்காட்டிலிருந்து 7.7 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாகரத்துகள் 13 விழுக்காடு அதிகரித்து 40,269 லிருந்து 45,502 ஆகவும், முஸ்லிம் அல்லாத விவாகரத்து 8.3 விழுக்காடு அதிகரித்து 10,593 லிருந்து 11,473 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், முஸ்லிம் திருமணங்களில் 1.5 விழுக்காடு மற்றும் முஸ்லிமல்லாதவர்களுக்கு 0.5 விழுக்காடு சரிவு ஏற்பட்டது.