Home One Line P1 வரவு செலவு திட்டம்: எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேசிய கூட்டணிக்கு முதல் வெற்றி

வரவு செலவு திட்டம்: எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேசிய கூட்டணிக்கு முதல் வெற்றி

474
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எடுத்துரைத்து, வரவு செலவு திட்டம் மீதான குழு அளவிலான விவாதத்தை இன்று திங்கட்கிழமை தொடங்கினார்.

அரசியல் நியமன ஒதுக்கீட்டிற்காக 181.4 ரிங்கிட் மில்லியன் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“பிரதமர் துறையில் அரசியல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 181.4 மில்லியன் ரிங்கிட் அதிகரிப்பு,” என்று அன்வார் கூறினார். அதற்கு பதிலாக கொவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடும் முன்னணி பணியாளர்களுக்கு இந்த தொகை செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“பிரதமர் மொகிதின் யாசின் தானே இன்று எழுந்து நின்று ஒப்பந்த ஊழியர்களின் தேவை என்ன என்று பதிலளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்களின் அவல நிலையை உணர்ந்திருப்பதைப் போல ஊடகங்களில் சித்தரிக்கிறீர்கள். ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்காக (கூடுதலாக) 181 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குகிறீர்கள். இது முன்னணி பணியாளர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஒப்பந்த ஊழியர்களைத் தவிர, பிரதமர் துறையின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு தூதர்களுக்கான ஒதுக்கீட்டையும் அன்வார் கேள்வி எழுப்பினார். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகளை வெளியுறவு அமைச்சகத்தால் மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் ஆற்றிய உரையின் முடிவில், வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று குழு நிலை விவாதங்கள் தொடர்ந்தன.

இது தொடர்பாக இன்று நடத்தப்பட்ட எண்ணிக்கை வாக்கெடுப்பில், தேசிய கூட்டணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எண்ணிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் துறை ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 105 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பெறப்பட்டன.

இன்று பிற்பகல் 2 மணியளவில் வாக்களிப்பு நடைபெற்ற போது, அரசாங்கத்தைச் சார்ந்த நஜிப் அப்துல் ரசாக் (பெக்கான்), அகமட் சாஹிட் ஹமிடி (பாகான் டத்தோ) மற்றும் தெங்கு ரசாலி ஹம்சா (குவா மூசாங்) நாடாளுமன்றத்தில் இல்லை.

எதிர்க்கட்சியில் மாசிர் குஜாத் (ஸ்ரீ அமான்), சோ கோன் இயோவ் (தங்சோங்), மைக்கேல் தியோ (மிரி), கிறிஸ்டினா லீவ் (தாவாவ்) மற்றும் எட்டு வாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.