புதுடில்லி : பாத்தா காலணி நிறுவனத்தின் அனைத்துலக தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான சந்தீப் கத்தாரியா நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் தற்போது இந்தியாவின் பாத்தா நிறுவனப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்படுகிறார்.
உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை இந்தியர்கள் ஏற்பது இப்போது வழக்கமாகிவிட்டது.
120 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம் பாத்தா. பலதரப்பட்ட காலணிகளையும், செருப்புகளையும் நடுத்தர மக்களுக்காக தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கி வரும் பாத்தா இந்தியாவிலும் பிரபல நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் முதல் அனைத்துலகத் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக அனைத்துலகத் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வந்த அலெக்சிஸ் நசார்ட் என்பவருக்கு பதிலாக சந்தீப் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதன் முதலாக 1894-ஆம் ஆண்டில் செக்கோஸ்லாவாகியா நாட்டில் தொடங்கிய பாத்தா தற்போது சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. உலகின் சுமார் 70 நாடுகளின் சந்தைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது பாத்தா.
அத்தனை சந்தைகளிலும் மிகப் பெரிய சந்தை இந்தியாவாகும். மிகப்பெரிய நடுத்தர மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பல நகர்களில் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் பாத்தா இயங்கி வருகிறது. 1931 முதல் இந்தியாவில் பாத்தா இயங்கி வரும் பாத்தா தற்போது 1500-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை அந்நாட்டில் கொண்டிருக்கிறது.
ஒரு குடும்பத்தை மட்டுமே உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படும் உலகம் முழுவதும் 5,800 விற்பனை மையங்களைக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 180 மில்லியன் ஜோடி காலணிகளை விற்பனை செய்கிறது.
உலகம் முழுவதும் 22 தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் பாத்தா 35 ஆயிரம் ஊழியர்களை அனைத்துலக அளவில் கொண்டிருக்கிறது.
2017-இல் பாத்தா நிறுவனத்தில் இணைந்தவர் சந்தீப் கத்தாரியா. அதற்கு முன்பாக வோடாபோன் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரியாகப் பணியாற்றினார். 25 ஆண்டுகால பணி அனுபவம் கொண்ட சந்தீப் கத்தாரியா சுமார் 20 ஆண்டுகள் யூனிலிவர் என்னும் பலதரப்பட்ட பயனர்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.
கெண்டக்கி பிரைட் சிக்கன், பிசா ஹட் போன்ற உணவகத் தொடர் நிறுவனங்களிலும் அவர் பணியாற்றி அனுபவம் பெற்றிருக்கிறார்.
பாத்தா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னர் அந்நிறுவனத்தில் பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டு வந்த சந்தீப், அதன் இலாபத்தையும் இரட்டிப்பாக்கிக் காட்டினார்.