Home அரசியல் போராடி கூடுதல் தொகுதிகள் பெற்ற கேவியஸ்! – இருந்த தொகுதிகளில் ஒன்றை இழந்த பழனிவேல்!

போராடி கூடுதல் தொகுதிகள் பெற்ற கேவியஸ்! – இருந்த தொகுதிகளில் ஒன்றை இழந்த பழனிவேல்!

641
0
SHARE
Ad

Palanivel-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 16 – பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ம.இ.கா வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால், வேட்பாளர் பட்டியலைப் பார்த்து ம.இ.கா வட்டாரங்கள் உற்சாகமடைந்ததாகவோ, பரபரப்படைந்ததாகவோ தெரியவில்லை. காரணம், போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிப் பேர் பழையவர்கள் – பார்த்த அதே முகங்கள்.

புதியவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டவர்கள் என்பதால் அந்த புதியவர்கள் வேட்பாளர்களானதைப் பார்த்து யாரும் ஆச்சரியம் அடைந்ததாகத் தெரியவில்லை.

எதிர்பார்க்காமல் அறிவிக்கப்பட்டிருக்கும் ஓரிருவரும் யார் இவர்கள் என விசாரித்ததில் ம.இ.காவின் முக்கிய புள்ளிகளுக்கே அவர்களை சரிவர தெரியவில்லை என்பதால், அந்த புதிய முகங்களைப் பார்த்து உற்சாகம் கொள்ளும் அளவுக்கு கட்சியில் இப்போது நிலைமை இல்லை.

இத்தகைய மந்தமான சூழ்நிலையில் ம.இ.கா வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களில் யார் வெல்வார்கள் என்பதுதான் தற்போது ம.இ.கா வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

கேவியசின் சாதுரியம் – பழனிவேலுவின் பலவீனம்

இதற்கிடையில் பேராக் மாநிலத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தது ம.இ.காவின் பலவீனத்தைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிபிபி கட்சித் தலைவர் டத்தோ கேவியஸ், வெல்வதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கட்சியின் பலத்தைக் காட்டுவதற்காக கூடுதல் தொகுதிகளைப் போராடிப் பெற்றிருக்கின்றார்.

கேவியசின் முன்னுதாரணத்தை வைத்துப் பார்க்கும் போது பழனிவேல் பேராக் மாநிலத்தில் ம..இகா வின் தொகுதி எண்ணிக்கையை தற்காத்திருக்க வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.

ஒரு சட்டமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்து அதற்கு பதிலாக ஒரு செனட் ம.இ.காவுக்கு வழங்க வேண்டும் என பழனிவேல் தேசிய முன்னணி தலைமைத்துவத்துடன் பேரம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அப்படியே பார்த்தாலும் ம.இ.காவுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளும் கூட வெல்ல முடியாத தொகுதிகள்தான். வெல்ல முடியாத மூன்று தொகுதிகளைப் பெற்றதற்கு, அதற்கு பதிலாக முன்பு போல் நான்கு தொகுதிகளையும் பெற்றிருக்கலாம் என்பதுதான் நியாயமான வாதமாக இருக்க முடியும்.

ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் 1,721 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் 2008இல் ம.இ.கா வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. புந்தோங் தொகுதியில் 5,315 வாக்குகள் பெரும்பான்மையில் ஜசெக கடந்த முறை வென்றது.

ஜெலாப்பாங் சட்டமன்றத்திலோ 6,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக வென்றிருக்கின்றது.

எனவே, இதில் எதுவுமே மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் கிடையாது.

அதிலும் ஜெலாப்பாங் தொகுதி ஜசெகவின் கோட்டையான பத்து காஜா நாடாளுமன்றத்தில் உள்ளடங்கியதாகும். புந்தோங் தொகுதியோ ஜசெகவின் மற்றொரு கோட்டையான ஈப்போ பாராட் நாடாளுமன்றத்தின் கீழ் வருவதாகும்.

எனவே, தவறான அணுகுமுறை மற்றும் தேர்வுகளினால் பேராக் மாநிலத்தில் எந்த சட்டமன்றத்தையும் வெல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ம.இ.கா சிக்கிக் கொண்டுள்ளது.