கோலாலம்பூர், ஜனவரி 25 – மலேசிய டெலிகோம் நிறுவனம் அறிமுகப்படுத்திய யுனிஃபை (UNIFI) எனப்படும் அதிவேக அகண்ட அலைவரிசை இணைய சேவையில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது மற்ற உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சியாகும். எதிர்வரும் மார்ச் மாதத்தோடு இந்த இணய சேவை மூன்றாண்டுகளை நிறைவு செய்கின்றது.
தற்போது 35 சதவீத விகித வளர்ச்சியில் தொடர்ந்து சேவையாளர்கள் இந்த இணையத்தொடர்புக்கு பதிவு செய்து வருவதால் எதிர்வரும் ஆண்டுகளில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என டெலிகோம் மலேசியா வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
எல்லா மலேசியர்களுக்கு அகண்ட அலைவரிசை இணய சேவையை வழங்கும் அரசாங்கத்தின் குறிக்கோளுக்கேற்ப தற்போது 94 வட்டாரங்களில் ஏறத்தாழ 1.34 மில்லியன் இடங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது முக்கிய நகரங்களிலும், வர்த்தக, தொழிற்பேட்டைகளிலும் கிடைக்கும் இந்த அகண்ட அலைவரிசை இணைய சேவை கூடிய விரைவில் நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்படும்.