கோலாலம்பூர்: அரசு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டு இல்லங்களை இடிக்க கெடா அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை நியாயமானது என்று அம்னோ இளைஞர் பிரிரைச் சேர்ந்த வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் கூறினார்.
ஆயினும், பாபாகோமோ என்றும் அழைக்கப்படும் அவர், கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட், மஇகா மற்றும் ஜசெக தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மது உவமையைக் கண்டித்தார்.
சனுசியின் அறிக்கை “காட்டுமிராண்டித்தனமானது மற்றும் நெறிமுறையற்றது” என்று அஸ்ரி கூறினார்.
அந்த அறிக்கையில், கெடா மந்திரி பெசார், மஇகா மற்றும் ஜசெக உள்ளிட்ட தலைவர்களை சாடியிருந்தார். ‘ஒரு பாட்டில் குடித்து விட்டு, இரண்டு மூன்று பாட்டில் குடிதது போல பேசக்கூடாது’ என்று அவர் கூறியிருந்தார்.
“இது மாநில அரசாங்கத்தின் திமிர்பிடித்த மனப்பான்மை மற்றும் ஒரு மலாய் முஸ்லிம் தலைவரின் உண்மை முகம். எனவே, இவரின் கூற்று இந்தியர்களை அவமதிக்கிறது. இதற்காக சனுசி வெட்கப்பட வேண்டும். மலேசிய இந்திய சமூகத்திற்கு அவமானங்களை ஏற்படுத்திய அவரது பேச்சுக்கு கெடா மந்திரி பெசார் இந்திய சமூகத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரச்சனையிலும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் ஒருவருக்கொருவர் பொறுத்து செயல்பட வேண்டும் என்றும் அஸ்ரி நம்புவதாகக் கூறினார்.