கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், மக்களவையில் தேசிய கூட்டணி நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் அரசியல் நிச்சயமற்ற பிரச்சனையை முன்வைத்து அவர் இதனை எழுப்பியுள்ளார்.
பிட்ச் ரேடிங்ஸ், கடன் மதிப்பீட்டில் அண்மையில் நாட்டின் தர நிர்ணயம் குறைப்பு குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி அன்வார், தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என்று கூறினார்.
“இந்த விஷயத்தை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தின் விருப்பத்தையும் நடைமுறைகளையும் மதிக்க சபாநாயகருக்கு தைரியம் தேவை,” என்று நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.
இதனை அடுத்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், அரசியல் நிச்சயமற்ற தன்மை தொடர்பான ஊகங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று மன்றம் கூறியது.
இந்த அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் , ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
“தர நிர்ணயம் குறைப்பு அரசாங்கத்திற்கு, குறிப்பாக நிதி அமைச்சருக்கு பெரும் அடியாகும். இது அரசாங்க கொள்கை திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது. கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தின் மாற்றத்திலிருந்து நீடித்த அரசியல் நிச்சயமற்ற தன்மையின் நீட்டிப்பு இது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.