Home One Line P1 மலாக்கா டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் காலமானார்

மலாக்கா டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் காலமானார்

1087
0
SHARE
Ad

மலாக்கா : மலாக்கா மாநிலத்தில் நீண்ட காலமாக மஇகா கட்சியின் மூலமும், ஆலய, சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த டத்தோ எஸ்.கே.ஆர்.எம்.துரைராஜ் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 10) அதிகாலையில் காலமானார்.

அவருக்கு வயது 86.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) கீழ்க்காணும் அவரது இல்லத்தில் நடைபெறும்:

No 312A, Jalan Yong Pak Khian,
Ujong Pasir, 75050 Melaka.

#TamilSchoolmychoice

நாளைக் காலை 9.00 மணி தொடங்கி அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்குகளும் பிரார்த்தனைகளும் நடைபெறும். அதன் பின்னர் நாளைக் காலை 11.00 மணிக்கு அவரது நல்லுடல் ஜெலுத்தோங் தகன மையத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

மஇகாவின் மூத்த சேவையாளர்

மலாக்கா மாநிலத்தில் மஇகா கிளைத் தலைவராக மிக நீண்ட காலம் சேவையாற்றிய துரைராஜ், மலாக்கா மாநில மஇகா தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

அதே வேளையில் தனது அரசியல் பயணத்தில் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் அவர்களின் தீவிர ஆதரவாளராகவும் நெருக்கமானவராகவும் செயல்பட்டு வந்தார்.

மலாக்காவில் உள்ள ஆலயத் திருப்பணிகள் சமூக இயக்கங்களிலும் நீண்ட காலமாக பல்வேறு வழிகளில் தனது பங்களிப்பை வழங்கி வந்த துரைராஜ் மிகச் சிறந்த பண்பாளராகவும், அனைவராலும் மதிக்கப்பட்டவராகவும் மலாக்கா இந்திய சமூகத்தில் திகழ்ந்தவர்.

நேசா கூட்டுறவுக் கழகத்தில் நீண்டகாலம் ஈடுபாடு கொண்டிருந்த துரைராஜ் அந்தக் கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநராகவும், துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.