Home One Line P2 “தா வின் நிறுவனம் ரோய்ஸ் பார்மா மருந்து நிறுவனத்தின் 32.5 % பங்குகளை  வாங்குகிறது” –...

“தா வின் நிறுவனம் ரோய்ஸ் பார்மா மருந்து நிறுவனத்தின் 32.5 % பங்குகளை  வாங்குகிறது” – சந்திரசேகர் சுப்பையா அறிவிப்பு

774
0
SHARE
Ad
தா வின் – ரோய்ஸ் பார்மா நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சந்திரசேகர் சுப்பையா

கோலாலம்பூர் : மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் தா வின் பெர்ஹாட் (Ta Win Holdings Bhd) என்ற நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் கால் பதிக்கிறது. தனது துணை நிறுவனமான தா வின் கோப்பர் பையோஹெல்த் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்தின் வாயிலாக முதல் கட்டமாக ரோய்ஸ் பார்மா சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 32.5 விழுக்காட்டுப் பங்குகளை தா வின் வாங்குகிறது.

இதற்கான விலை நிர்ணயத் தொகை 20.85 மில்லியன் ரிங்கிட் ஆகும். இதன் மூலம் மருந்து தயாரிப்புத் தொழிலில் தனது முதலாவது முதலீட்டை தா வின் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

இந்தத் தகவல்களை ரோய்ஸ் பார்மா நிறுவனக் குழுமத்தின் துணைத் தலைவரான டத்தோ சந்திரசேகர் சுப்பையா தெரிவித்தார். நாட்டின் இந்திய வணிகப் பிரமுகர்களில் ஒருவரான சந்திரசேகர் சுப்பையா ரோய்ஸ் பார்மா நிறுவனத்தின் பங்குடமையாளர்களிலும் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

தா வின் நிறுவனம், ரோய்ஸ் பார்மா நிறுவனத்துடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி முதல் ஆண்டில் 10 மில்லியன் ரிங்கிட் இலாபத்தையும், இரண்டாவது ஆண்டில் மேலும் 10 மில்லியன் ரிங்கிட் இலாபத்தையும் ஈட்டித் தர ரோய்ஸ் பார்மா உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ரோய்ஸ் பார்மா

நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரோய்ஸ் பார்மாவில் முதலீடு செய்வதன் மூலம் மருந்து தயாரிப்புத் தொழிலில் தாங்கள் இறங்குவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தங்களின் நீண்ட கால வணிக வியூகத் திட்டத்தின் ஒரு பகுதி இதுவாகும் எனவும் தா வின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ இங்கூ தியங் உங் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார்.

“இதன் மூலம், ரோய்ஸ் பார்மா ஏற்கனவே கொண்டிருக்கும் தயாரிப்புக் கட்டமைப்பு வசதிகள், மருந்துகளை தயாரிக்கும், உருவாக்கும் துறைகளில் அவர்களுக்கிருக்கும் தளங்களையும், பரந்த அனுபவத்தையும், தா வின் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போதைய சூழலுக்குத் தேவையான, குறிப்பாக கொவிட்-19 தொடர்பான புதிய மருந்து உற்பத்திகளிலும் கவனம் செலுத்த முடியும்” என்றும் இங்கூ தியங் உங் விவரித்தார்.

ரோய்ஸ் பார்மாவின் புதிய வணிக உடன்பாடு குறித்துக் கருத்துரைத்த சந்திரசேகர் சுப்பையா, தங்களின் நிறுவனமும், தா வின் நிறுவனமும் மலேசியாவில் மருந்து தயாரிப்பு தொழில் குறித்து நம்பிக்கையான எதிர்கால வியூக நோக்கத்தைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

டத்தோ சந்திரசேகர் சுப்பையா

“தா வின் நிறுவனத்தின் ஆதரவுடன் ஆராய்ச்சிகள், விற்பனை சங்கிலித் தொடர்கள், விநியோகம், தயாரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் புதிய தொழில்நுட்பத்தை மேற்கொள்ள முடியும். அதன் மூலம் எங்களின் உள்நாட்டு, அனைத்துலக வாணிப விரிவாக்கத்தைத் தொடர முடியும்” எனவும் சந்திரசேகர் சுப்பையா (படம்) நம்பிக்கை தெரிவித்தார்.

தா வின் நிறுவனம் செம்பு (copper)  உலோகம் தொடர்பிலான பொருட்களை உற்பத்தி செய்வதை தனது மைய வணிகமாகக் கொண்டிருக்கிறது.

ரோய்ஸ் பார்மா மருந்துகளைத் தயாரிக்கும் விநியோகிக்கும் வணிகத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. மேலும் மருத்துவமனை உபகரணங்கள், கருவிகள், ஒருமுறைப் பயன்பாட்டுக்குரிய மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றையும் அரசாங்க அங்கீகாரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பொருட்களையும் தயாரிக்கிறது.

மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் தங்களின் 65 மருந்துகளை ரோய்ஸ் பார்மா பதிவு செய்திருக்கிறது.

அரசாங்க மருத்துவ மையங்களுக்கு ஒப்பந்தம் மூலம் 25 மருந்துகளைத் தயாரித்து விநியோகிக்கும் உரிமத்தையும் ரோய்ஸ் பார்மா கொண்டிருக்கிறது.

ரோய்ஸ் பார்மாவின் பங்குகளை வாங்கும் ஒப்பந்த நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 14) மனிதவள துணையமைச்சர் அவாங் ஹாஷிம் முன்னிலையில் நடைபெற்றது. மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருப்பதால் சரவணன் கலந்து கொள்ள இயலவில்லை.

ரோய்ஸ் பார்மா நிறுவனத்தின் தலைவர் சைனால் அரிப் டான்ஸ்ரீ மாஹ்முட், தா வின் நிறுவன நிர்வாக இயக்குநர் டான் பூ சுவான் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.