புது டில்லி: இந்திய மத்திய அரசின் விவசாயச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பதை மறுத்து, எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகளும், மாவோயிஸ்டுகளும் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்திய மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும், சட்டங்களை இரத்து செய்ய வைக்கப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வழிவிடுவதாகவும், ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து சரியான முன்மொழிதல்களுடன் முன்வர வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.