கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தாயார் துன் ஹாஜா ராஹா காலமானதை அடுத்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“நான் அரசாங்கம் மற்றும் அனைத்து மலேசியர்களை பிரதிநிதித்து, டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும், துன் ஹாஜா ராஹா, டிசம்பர் 18 அன்று காலமானதை அடுத்து இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த துன் ஹாஜா ராஹா நோவாவுக்கு “தேசிய இறுதி சடங்கு” மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் சடலம் ஹீரோஸ் கல்லறை, தேசிய மசூதி வட்டத்தில் டிசம்பர் 19 அன்று அடக்கம் செய்யப்படும்,” என்று பிரதமர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவின் இரண்டாவது பிரதமரும் நஜிப்பின் தந்தையுமான துன் அப்துல் ரசாக்கின் துணைவியாரான தோபுவான் ஹாஜா ராஹாவுக்கு வயது 87.
துன் ராஹாவுக்கு உடல் நடம் சரியில்லை என்று கூறி நஜிப் ரசாக் வியாழக்கிழமை தமது முகநூலில் அறிவித்திருந்தார். அதனை அடுத்து நாட்டின் தேசிய தலைவர்கள் நஜிப்பை சந்தித்து நலம் விசாரித்தனர். அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் நஜிப்புக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை தமது தாயார் காலமானச் செய்தியை நஜிப் டுவிட்டர் மற்றும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.