Home One Line P1 நினைவஞ்சலி : கண்ணியம், கௌரவத்தோடு வாழ்ந்து மறைந்த தோபுவான் ஹாஜா ராஹா

நினைவஞ்சலி : கண்ணியம், கௌரவத்தோடு வாழ்ந்து மறைந்த தோபுவான் ஹாஜா ராஹா

791
0
SHARE
Ad

கோலாலம்பூர் : (இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) காலமான நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹா குறித்த சில வரலாற்று சம்பவங்களோடு நினைவஞ்சலியை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) காலமான நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹா மலேசியாவின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்.

பல மறக்க முடியாத அரசியல் நடப்புகள், சம்பவங்கள், குடும்பப் பின்னணி கொண்டவர் தோபுவான் ராஹா. அவரது வாழ்க்கையின் சில சுவாரசியமானப் பக்கங்களைத் திரும்பிப் பார்த்து நினைவு கூர்வோம் :

  • ராஹாவின் கணவர் துன் ரசாக் மலேசியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்தவர். மகன் நஜிப் துன் ரசாக்கும் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். அந்த வகையில் தனது கணவர் தனது மகன் இருவரும் பிரதமராகப் பதவி வகித்த காட்சிகளை தனது வாழ்நாளிலேயே தன் கண் முன்னாலேயே பார்த்த பெருமைக்குரியவர் ராஹா.
  • கணவர் துன் ரசாக் பிரதமராக வலம் வந்த காலங்களில் கூட ராஹா பகிரங்கமாகவோ, பகட்டாகவோ, உலா வந்ததில்லை. மிகுந்த தன்னடக்கத்தோடு வாழ்ந்தார். தனது கணவரையும், குடும்பத்தையும், ஐந்து குழந்தைகளையும் கவனித்து வளர்ப்பதிலுமே அக்கறை செலுத்தினார்.
தோபுவான் ஹாஜா ராஹா
  • கணவர் துன் ரசாக்கின் மறைவுக்குப் பின்னர் அவர் பெரும்பாலும் எந்தவிதப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார். அவர் எப்படி இருக்கிறார், எங்கிருக்கிறார் என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டதில்லை.
  • பின்னர் தனது மகன் நஜிப் பிரதமரான போது கூட, தாயார் என்ற முறையில் கூட அவர் எந்தவிதப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை.  பெரும்பாலும் வீட்டுடனே இருந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கு பெற்றார்.
துன் உசேன் ஓன் – துன் அப்துல் ரசாக்
  • ராஹாவின் மூத்த சகோதரி துன் சுஹைலா. ராஹாவை விட இரண்டு வயது மூத்தவர். சுஹைலா மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹூசேன் ஓனை மணந்தவர். சுஹைலாவின் மகன்தான் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்.
  • ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு சகோதரிகளும் அடுத்தடுத்த இரண்டு பிரதமர்களை மணந்தவர்கள் என்பது ஒரு சுவாரசியமானத் தகவல்.
  • சுஹைலா கடந்த 4 அக்டோபர் 2014-இல் காலமானார். அவருக்கும் தேசிய மரியாதையுடன் கூடிய நல்லடக்கச் சடங்கு கௌரவம் வழங்கப்பட்டது. தலைநகர் தேசியப் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் கல்லறையில் சுஹைலா நல்லடக்கம் செய்யப்பட்டார்.
துன் ஹூசேன் ஓன் – சுஹைலா தம்பதியர்
  • இரண்டு சகோதரிகளும் தங்கள் கணவர்கள் பிரதமர்களாக இருந்தாலும், தனி ஆவர்த்தனம் வாசிக்காமல், எளிமையான தோற்றம், பண்பான நடவடிக்கைகளோடு – அரசியல் தலைவர்களான தங்கள் கணவர்களுக்காகவே – வாழ்க்கை நடத்தியவர்கள்.
  • மூத்த சகோதரி சுஹைலா,  தனது கணவர் ஹூசேன் ஓன் பிரதமராக இருந்த காலத்தில் ‘பக்தி’ (Bakti) எனப்படும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் துணைவியர்களின் சேவை இயக்கமாக தொடக்கி வைத்தவர். இன்றைக்கு ஒரு பேரியக்கமாக, நாட்டின் முக்கிய தன்னார்வ தொண்டூழிய இயக்கமாக பக்தி உயர்ந்து நிற்கின்றது.
  • 1948ஆம் ஆண்டில் ஹூசேன் ஓனைத் திருமணம் செய்த சுஹைலாவுக்கு ஆறு பிள்ளைகள். நான்கு பெண்கள். இருவர் ஆண்கள். 1946ஆம் ஆண்டில் ஹூசேன் ஓன் – சுஹைலா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, சுஹைலாவுக்கு பதினைந்து வயதுதான். காதல் வயப்பட்ட அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் திருமண பந்தத்தில் 1948-இல் இணைந்தனர். அப்போது சுஹைலாவுக்கு 18 வயதுதான்!
  • ஹூசேன் ஓன் – சுஹைலா இருவருமே பிரபலமான அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்குத் திருமணம் நடந்தபோது ஹூசேன் ஓனின் தந்தையார் ஓன் ஜபார் ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இருந்தவர். ஓன் ஜபாரின் தந்தையான ஜபார் ஹாஜி முகமட் (Jaafar Haji Muhammad) -அதாவது ஹூசேன் ஓனின் தந்தை வழி தாத்தா – ஜோகூரின் முதல் மந்திரி பெசாராக இருந்தவர் என்பது மற்றொரு சுவாரசியமான சரித்திரக் குறிப்பு. அம்னோவின் நிறுவனர்களில் ஒருவரான ஓன் ஜபார் (படம்) 1946ஆம் ஆண்டில் அம்னோவின் முதல் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • ராஹா, சுஹைலாவின் தந்தையான தந்தையான டான்ஸ்ரீ முகமட் நோவா ஓமார் (Tan Sri Mohammad Noah Omar) ஓன் ஜபாருடன் இணைந்து அம்னோவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
  • ஓன் ஜபாருக்கும், முகமட் நோவாவுக்கும் இடையில் இருந்த நட்புதான், அவர்கள் பிள்ளைகள் இருவரையும் சந்திக்கவும் வைத்து, கால ஓட்டத்தில் அவர்களை சம்பந்திகளாகவும் ஆக்கியது.
  • ஓன் ஜபாருடன் அம்னோவை விட்டு வெளியேறாமல், தனது அரசியலைத் தொடர்ந்த முகமட் நோவா, சுதந்திரம் கிடைத்ததும், முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் அமைச்சராகவும் இருந்திருக்கின்றார்.
  • இப்படியாக, இரு வேறு பிரபலமான அரசியல் குடும்பங்களில் இருந்து வந்த ஹூசேன் ஓனும், சுஹைலாவும் கணவன் மனைவியாக இணைய மற்றொரு சகோதரியான ராஹா பகாங் மாநிலத்தில் இருந்து அரசியலில் காலடி வைத்த துன் ரசாக்கைக் கைப்பிடித்தார்.
துன் ரசாக் – தோபுவான் ராஹா குடும்பத்தினர்
  • துன் அப்துல் ரசாக்கும் துன் ஹூசேன் ஓனும் ஒரே வருடத்தில் – 1922ஆம் ஆண்டில் – பிறந்தவர்கள். ரசாக் பகாங் மாநிலத்துக்காரர், ஹூசேன் ஓன் ஜோகூர் மாநிலத்துக்காரர். இருப்பினும் பெண் எடுத்த விஷயத்தில் இருவரும் ஒரே குடும்பத்தில் உறவினர்களாக – நமது மொழியில் சொல்வதென்றால் சகலைகளாக – இணைந்தனர்.
  • துங்கு காலத்தில் அம்னோவில் இரண்டாவது நிலையில் இருந்த துன் ரசாக் துணைப் பிரதமராகவும், கட்சியின் துணைத் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். பின்னர் துங்கு பதவியை விட்டு விலகும் சூழல் வந்தபோது, பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்.
  • துன் ரசாக் பிரதமரானதும், அவருக்குத் துணைத் தலைவராக, துணைப் பிரதமராக பணியாற்றிவர் துன் டாக்டர் இஸ்மாயில். பலவகைகளிலும் சிறந்த தலைமைத்துவ அம்சங்களைக் கொண்டிருந்த டாக்டர் இஸ்மாயில் திடீரென மாரடைப்பால் காலமாகி விட, அப்போதைய அம்னோ உதவித் தலைவராக இருந்த ஹூசேன் ஓனை துணைப் பிரதமராக்கினார் துன் ரசாக்.
  • தனது சகலையை – தனது உறவினரை – துன் ரசாக் துணைப் பிரதமராக நியமித்தாலும், அந்தக் காலத்தில் சலசலப்புகளோ, எதிர்ப்புகளோ எழவில்லை. காரணம், ஹூசேன் ஓனின் சிறந்த தலைமைத்துவ பின்புலம்!
  • இன்று காலமான ராஹா பத்து சகோதர, சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆக இளையவர். ஜோகூர்பாரு இடைநிலைப் பள்ளியில் கல்வி கற்ற ராஹா துன் ரசாக்கை 1952-ஆம் ஆண்டில் மணந்தார். அவர்களுக்கு 5 பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் முன்னாள் பிரதமர்  நஜிப். ஆக இளையவர் சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவர் நசிர் ரசாக்.
  • துன் ரசாக் பிரதமராக மரணமடைந்தபோது ராஹாவின் வயது 43-தான்.

-இரா.முத்தரசன்