Home நாடு அரசியல் பார்வை : கடந்த கால மலேசிய சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த துன் சுஹைலாவின்...

அரசியல் பார்வை : கடந்த கால மலேசிய சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த துன் சுஹைலாவின் மறைவு!

711
0
SHARE
Ad

Tun suhailahகோலாலம்பூர், அக்டோபர் 6 – சனிக்கிழமை அதிகாலை முன்னாள் பிரதமர் துன் ஹூசேன் ஓனின் துணைவியாரும், நடப்பு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடினின் தாயாருமான துன் சுஹைலா காலமானார் என்ற செய்தி கடந்த கால மலேசிய அரசியலைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அசை போட வைத்தது.

நமது நினைவில் உறங்கிக் கொண்டிருந்த சில சரித்திரக் குறிப்புகளையும் கிளறிவிட்டது.

நமது இரண்டு முன்னாள் பிரதமர்களின் துணைவியர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதும் ஆச்சரியகரமான – இன்னும் பலருக்குத் தெரியாத ஒரு செய்தி.

#TamilSchoolmychoice

நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கின் மனைவி துன் ரஹா இளையவர். 1933ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் இன்னும் உயிரோடிருக்கின்றார். இவரது மகன்தான் நமது இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்.

மூன்றாவது பிரதமர் துன் ஹூசேன் ஓனின் மனைவி துன் சுஹைலா இரண்டு வயது மூத்த சகோதரி. 1931ஆம் ஆண்டில் பிறந்த அவர்தான் கடந்த சனிக்கிழமை இயற்கை எய்தியவர்.

Hussein Onn and Suhaila Old Photo

இளவயது ஹூசேன் ஓன் – சுஹைலா தம்பதியர்

தங்கள் கணவர்கள் பிரதமர்களாக இருந்தாலும், தனி ஆவர்த்தனம் வாசிக்காமல், எளிமையான தோற்றம், பண்பான நடவடிக்கைகளோடு – அரசியல் தலைவர்களான தங்கள் கணவர்களுக்காகவே வாழ்க்கை நடத்தியவர்கள் அவர்கள் இருவரும்.

அதன் காரணமாக, தங்களின் கணவர்களின் மறைவுக்குப் பின்னர் தங்களை முன்னிலைப்படுத்தாமல் வாழ்ந்தவர்கள். குடும்ப நிகழ்வுகள், தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்களின் நிகழ்வுகளைத் தவிர எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும், அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் வாழ்ந்தவர்கள்.

ஆனால், அதே சமயம், தங்களின் பிள்ளைகளை சிறந்த முறையில் கவனித்து வளர்த்தெடுத்தவர்கள். அதன் பயனாக, துன் ரசாக்கின் மூத்த புதல்வர் நஜிப் துன் ரசாக் இன்று நாட்டின் பிரதமராக இருக்கின்றார்.

துன் சுஹைலாவின் இளைய புதல்வரும் வழக்கறிஞருமான ஹிஷாமுடின் அம்னோ உதவித் தலைவராகவும், தற்காப்பு அமைச்சராகவும் அரசியல் களத்தில் உயர்ந்திருக்கின்றார்.

காலம் அவரையும் அடுத்த பிரதமர் என்ற களத்திற்கு நகர்த்திக்கொண்டிருக்கின்றது என்பது ஒரு சில அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

துன் சுஹைலாவின் சேவையும் – திருமண வாழ்க்கையும்

Hussein Onn Malaysia's 3rd PMஹூசேன் ஓன் (படம்) பிரதமராக இருந்த காலத்தில் ‘பக்தி’ (Bakti) எனப்படும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் துணைவியர்களின் சேவை இயக்கமாக தொடக்கி வைத்தவர் சுஹைலா.

இன்றைக்கு ஒரு பேரியக்கமாக, நாட்டின் முக்கிய தன்னார்வ தொண்டூழிய இயக்கமாக பக்தி உயர்ந்து நிற்கின்றது.

1948ஆம் ஆண்டில் ஹூசேன் ஓனைத் திருமணம் செய்த சுஹைலாவுக்கு ஆறு பிள்ளைகள். நான்கு பெண்கள். இருவர் ஆண்கள்.

1946ஆம் ஆண்டில் ஹூசேன் ஓன் – சுஹைலா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, சுஹைலாவுக்கு பதினைந்து வயதுதான். காதல் வயப்பட்ட அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் திருமண பந்தத்தில் 1948இல் இணைந்தனர். அப்போது சுஹைலாவுக்கு 18 வயதுதான்!

ஹூசேன் ஓன் – சுஹைலா இருவருமே பிரபலமான அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

அவர்களுக்குத் திருமணம் நடந்தபோது ஹூசேன் ஓனின் தந்தையார் ஓன் ஜபார் ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இருந்தவர்.

ஓன் ஜபாரின் தந்தையான ஜபார் ஹாஜி முகமட் (Jaafar Haji Muhammad) -அதாவது ஹூசேன் ஓனின் தந்தை வழி தாத்தா – ஜோகூரின் முதல் மந்திரி பெசாராக இருந்தவர் என்பது மற்றொரு சுவாரசியமான சரித்திரக் குறிப்பு.

Onn Jaafarஅம்னோவின் நிறுவனர்களில் ஒருவரான ஓன் ஜபார் (படம்) 1946ஆம் ஆண்டில் அம்னோவின் முதல் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரிட்டிஷார் கொண்டு வந்த மலாயன் யூனியன் திட்டத்திற்கு எதிராக மலாய்க்காரர்களின் உரிமைகளையும், மலாய் சுல்தானின் சலுகைகளையும் நிலைநாட்ட உருவாக்கப்பட்ட கட்சி அம்னோ.

ஆனால், கால ஓட்டத்தில் அம்னோவின் மற்ற இனத்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடிய ஓன் ஜபார், அந்தக் கொள்கையின் காரணமாக ஏற்பட்ட பிணக்கால் 1951இல் அம்னோவில் இருந்து வெளியேறி மலாயா சுதந்திரக் கட்சியை (Independence of Malaya Party) தோற்றுவித்தார்.

இனரீதியான அரசியலுக்கு எதிராக அன்றே போராடியவர் ஓன் ஜபார். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியடைந்தார்.

அவருக்குப் பின்னர் அம்னோவின் தலைவராக துங்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

துன் சுஹைலாவின் தந்தையான தந்தையான டான்ஸ்ரீ முகமட் நோவா ஓமார் (Tan Sri Mohammad Noah Omar) ஓன் ஜபாருடன் இணைந்து அம்னோவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

ஓன் ஜபாருக்கும், முகமட் நோவாவுக்கும் இடையில் இருந்த நட்புதான், அவர்கள் பிள்ளைகள் இருவரையும் சந்திக்கவும் வைத்து, கால ஓட்டத்தில் அவர்களை சம்பந்திகளாகவும் ஆக்கியது.

ஆனால், ஓன் ஜபாருடன் அம்னோவை விட்டு வெளியேறாமல், தனது அரசியலைத் தொடர்ந்த முகமட் நோவா, சுதந்திரம் கிடைத்ததும், முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் அமைச்சராகவும் இருந்திருக்கின்றார்.

இப்படியாக, இரு வேறு பிரபலமான அரசியல் குடும்பங்களில் இருந்து வந்த ஹூசேன் ஓனும், சுஹைலாவும் கணவன் மனைவியாக இணைந்தனர்.

துன் ரசாக்கும் – ஹூசேன் ஓனும்….

Tun Razak family photo

துன் ரசாக் தனது மனைவி துன் ரஹா (காலமான துன் சுஹைலாவின் இளைய சகோதரி) மற்றும் குடும்பத்தினருடன்… பின்னால் இடது புறம் நிற்பவர் இன்றைய பிரதமர் நஜிப்…

துன் அப்துல் ரசாக்கும் துன் ஹூசேன் ஓனும் ஒரே வருடத்தில் – 1922ஆம் ஆண்டில் – பிறந்தவர்கள். ரசாக் பகாங் மாநிலத்துக்காரர், ஹூசேன் ஓன் ஜோகூர் மாநிலத்துக்காரர்.

இருப்பினும் பெண் எடுத்த விஷயத்தில் இருவரும் ஒரே குடும்பத்தில் உறவினர்களாக – நமது மொழியில் சொல்வதென்றால் சகலைகளாக – இணைந்தனர்.

துங்கு காலத்தில் அம்னோவில் இரண்டாவது நிலையில் இருந்த துன் ரசாக் துணைப் பிரதமராகவும், கட்சியின் துணைத் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். பின்னர் துங்கு பதவியை விட்டு விலகும் சூழல் வந்தபோது, பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்.

ரசாக் பிரதமரானதும், அவருக்குத் துணைத் தலைவராக, துணைப் பிரதமராக பணியாற்றிவர் துன் டாக்டர் இஸ்மாயில். பலவகைகளிலும் சிறந்த தலைமைத்துவ அம்சங்களைக் கொண்டிருந்த டாக்டர் இஸ்மாயில் திடீரென மாரடைப்பால் காலமாகி விட, அப்போதைய அம்னோ உதவித் தலைவராக இருந்த ஹூசேன் ஓனை துணைப் பிரதமராக்கினார் துன் ரசாக்.

தனது சகலையை – தனது உறவினரை – துன் ரசாக் துணைப் பிரதமராக நியமித்தாலும், அந்தக் காலத்தில் சலசலப்புகளோ, எதிர்ப்புகளோ எழவில்லை.

காரணம், ஹூசேன் ஓனின் சிறந்த தலைமைத்துவ பின்புலம்!

ஹூசேன் ஓனின் இராணுவப் பின்னணியும் – தலைமைத்துவ ஆற்றலும்

ஹூசேன் ஓனின் தந்தைதான் அம்னோவின் முதல் தலைவரான ஓன் ஜபார் என்ற பிரபலமும், மரியாதையும் ஒரு புறமிருக்க, இராணுவத்திலும் பணியாற்றியவர் ஹூசேன் ஓன்.

1940இல் ஜோகூர் மாநில இராணுவத்தில் சேர்ந்த ஹூசேன் ஓன் 1941ஆம் ஆண்டில் இந்தியாவின் டேராடூன் நகரிலுள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து இராணுவப் பயிற்சி பெற்றவர்.

பின்னர் இராணுவத்திலிருந்து, அரசாங்க சேவையில் இணைந்தவர், கோலசிலாங்கூர் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். 1949இல் அரசு சேவையிலிருந்து விலகி அரசியலில் தந்தையோடு ஈடுபட்ட, ஹூசேன் ஓன்தான் அம்னோவின் முதல் இளைஞர் பகுதித் தலைவர்.

1951இல் தந்தையின் கொள்கைக்காக அவரோடு, அம்னோவில் இருந்து வெளியேறிய ஹூசேன் ஓன், பின்னர் ஓன் ஜபார் தொடக்கிய மலாயா சுதந்திரக் கட்சி மக்களின் ஆதரவை இழக்கவே, அரசியலில் இருந்து ஒதுங்கி இலண்டன் சென்று சட்டம் படித்தார்.

வழக்கறிஞராக நாடு திரும்பிய ஹூசேன் ஓன் பின்னர் கோலாலம்பூரில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார்.

இதற்கிடையில் அவரது தந்தை ஓன் ஜபார் 1962ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார்.

தனது சகலையான ஹூசேன் ஓனை மீண்டும் வற்புறுத்தி 1968ஆம் ஆண்டில் அரசியலுக்குக் கொண்டு வந்தார் துன் ரசாக். 1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டு வென்ற ஹூசேன் ஓன் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தந்தையின் பிரபலம், இராணுவப் பயிற்சியால் பெற்ற கண்டிப்பு கலந்த நேர்மையான தலைமைத்துவ ஆற்றல், வழக்கறிஞர் என்னும் கல்வித் தகுதி – இப்படியாக எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருந்ததால்தான்,

ஹூசேன் ஓன், 1973ஆம் ஆண்டில் துன் டாக்டர் இஸ்மாயிலின் மறைவினால், துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, அம்னோவில் சலசலப்போ, எதிர்ப்போ எழவில்லை.

துன் ரசாக்கின் மறைவும் – ஹூசேன் ஓனின் பிரதமர் பதவி உயர்வும்…

Tun Abdul Razakஅடுத்த மூன்றாண்டுகளில் – 1976ஆம் ஆண்டில் – துன் ரசாக் (படம்) அகால மரணமடைந்தார். துணைப் பிரதமராகவும், அம்னோவின் துணைத் தலைவராகவும் இருந்த ஹூசேன் ஓன் இயல்பாகவே பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஹூசேன் ஓன் பிரதமரானதும் அம்னோவிலும், அன்றைய அரசியல் வட்டாரங்களிலும் எழுந்த மிகப்பெரிய கேள்வி – யாரைத் தன் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் என்பதுதான்!

அப்போது முதலாவது தேசிய உதவித் தலைவராக இருந்தவர் துன் கபார் பாபா. இரண்டாவது நிலையில் இருந்தவர் நிதியமைச்சர் துங்கு ரசாலி ஹம்சா. மூன்றாவது நிலையில் இருந்தவர்தான் டாக்டர் மகாதீர்.

மூவரில் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹூசேன் ஓன், மரபிற்கு மாறாக, மகாதீரைத் தேர்ந்தெடுத்தார். அதன் காரணமாக, பிணக்கு கொண்டு கபார் பாபா, அமைச்சரவையில் இருந்தே விலகினார் என்பது மற்றொரு கிளைக் கதை.

1981ஆம் ஆண்டு வரை பிரதமராகத் தொடர்ந்த ஹூசேன் ஓன்  அதே ஆண்டில் தனக்கு நிகழ்ந்த இருதய அறுவைச் சிகிச்சை காரணமாக, உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி, கௌரவமாக பதவியிலிருந்து விலகினார்.

அவரது பதவி விலகல் காரணமாக துணைப் பிரதமராகவும், துணைத் தலைவராகவும் இருந்த மகாதீர் இயல்பாகவே, நாட்டின் நான்காவது பிரதமரானார்.

1990ஆம் ஆண்டில் தனது 68வது வயதில் ஹூசேன் ஓன் காலமானார்.

அவரது மனைவிதான் கடந்த சனிக்கிழமை காலமான துன் சுஹைலா!

காலம் சுழல்கின்றது.

யார் கண்டது?

ஒரு காலத்தில் ரசாக் – ஹூசேன் ஓன் என – இரண்டு சகலைகள் பிரதமராகவும் – துணைப் பிரதமராகவும் இருந்து நாட்டை வழிநடத்தியது போல் –

இனிவரும் ஒரு காலகட்டத்தில் நஜிப் – ஹிஷாமுடின் என்ற இரு பெரியம்மா – சின்னம்மா மகன்கள் – நமது மொழியில் சொல்வதென்றால் – இரண்டு பங்காளிகள் – பிரதமராகவும், துணைப் பிரதமராகவும் இணைந்து நாட்டை வழி நடத்தக் கூடும்

-இரா.முத்தரசன்