கோலாலம்பூர், அக்டோபர் 7 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரு விமானங்கள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு உரசிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமையன்று சிப்பாங்கிலுள்ள அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ.வின் விமானம் நிறுத்தும் பகுதி 5 இல் இருந்து மாஸ் விமானம் ஒன்று மெல்ல ஒடுபாதை நோக்கி ஊர்ந்து சென்றது. அப்போது பகுதி 7இல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானத்தின் இறக்கை மீது அது எதிர்பாராதவிதமாக மோதியது.
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பழைய கோப்பு படம்
மோதிய விமானத்தின் வழித்தட எண் எம்எச் 1158 என்றும், அது பினாங்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது என்றும் பின்னர் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் இரு விமானங்களும் சேதமடைந்தன. இதையடுத்து இரு விமானங்களில் இருந்தும் பயணிகள் இறக்கிவிடப்பட்டு, வேறு விமானங்கள் வழி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் காரணமாக மாஸ் விமானங்களின் நேரப் பட்டியலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால், மாஸ் நிறுவனத்தின் தோற்றம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு, பயணிகளிடையே அவநம்பிக்கையும் அதிகரித்து வருகின்றது.