Home One Line P1 1,771 சுகாதார ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

1,771 சுகாதார ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

410
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 1,771 பேர் என்று மலேசிய சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை, முதல் முறையாக உறுதிப்படுத்தியது.

கொவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது 1,359 அல்லது 76.7 விழுக்காடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“டிசம்பர் 18 அன்று, மொத்தம் 280 ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 84.2 விழுக்காடு நிலையான நிலையில் உள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் மொத்தம் 1,697 சுகாதார ஊழியர்கள் இல்லத்திலும், தனிமைப்படுத்தப்படும் மையங்களிலும் வீட்டு கண்காணிப்பு ஆணைக்கு உட்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

690 செவிலியர்கள் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 211 மருத்துவ அதிகாரிகள் அல்லது மருத்துவர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். மொத்தம் 84 பட்டதாரி மருத்துவ அதிகாரிகளும் பாதிப்படைந்துள்ளனர். சுகாதார உதவியாளர்கள் இடையே 146 சம்பவங்களும், மருத்துவ அதிகாரி உதவியாளர்களுக்கு இடையே 144 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

அதிகமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள கிள்ளான் பள்ளத்தாக்கில், கிள்ளானில் துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் 54 சம்பவங்களும், செர்டாங் மருத்துவமனையில் 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

சுங்கை புலோ மருத்துவமனை (15 சம்பவங்கள்), கோலாலம்பூர் மருத்துவமனை (10 சம்பவங்கள்), அம்பாங் மருத்துவமனை (5 சம்பவங்கள் ) மற்றும் செலாயாங் மருத்துவமனை (4 சம்பவங்கள்).