Home One Line P2 ஆஸ்ட்ரோ “குருதி மழை” – கலைஞர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ “குருதி மழை” – கலைஞர்களின் அனுபவங்கள்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீண் அலைவரிசையில் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த “குருதி மழை” என்ற உள்ளூர் தொலைக்காட்சித் தொடர்.

அந்தத் தொடரில் பங்கு பெற்ற கலைஞர்கள் சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இயக்குநர்: இந்திரன் சண்முகம்

குருதி மழை தொடரின் இயக்குநர் இந்திரன் சண்முகம்

• பூனைக்கும் எலிக்கும் இடையே ஏற்படும் விளையாட்டைப் போல மழை நாட்களில் சந்தேகத்திற்கு இடமில்லாதப் பெண்களை வேட்டையாடும் தொடர் கொலைக்காரனுக்கும் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருவித விளையாட்டைச் சித்தரிக்கின்றது, ‘குருதி மழை’.

#TamilSchoolmychoice

ஒருவரின் வெளித்தோற்றம், ஆடை அணியும் விதம், மற்றவர்களிடம் தன்னை அடையாளப்படுத்தும் முறை ஆகிய சில விஷயங்களைக் கொண்டு ஒருவரை எளிதாக நம்பிவிடக்கூடாது என்பதே இத்தொடரின் முக்கியக் கருத்தாகும். 30 கொலைகளைப் புரிந்த ஒரு பிரபல அமெரிக்கத் தொடர் கொலையாளியான டெட் பண்டி (Ted Bundy) போன்ற தொடர் கொலையாளிகளுக்குப் பின்னாலுள்ள உளவியலையும் அவர்களின் உந்துதல்களையும் நான் எப்போதும் கண்டறிவேன்.

மேலும், தொடர் கொலைகளுக்குப் பின்னால் மறைந்துக் கிடக்கும் சில உந்துதல்களை வெளிக்கொணரும் நோக்கைக் கொண்டது இத்தொடர். அத்தகையத் தொடரை இயக்க எனது உத்வேகத்தின் ஒரு பகுதியாக இருந்த ‘செவன்’ (Seven), ‘வெர்டிகோ’ (Vertigo) மற்றும் பல த்ரில்லர் படங்களை நான் இரசிப்பேன்.

நான் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மேற்கல்வியைத் தொடந்தேன்.. அதுமட்டுமின்றி ஒரு சில குறும்படங்களையும் தயாரித்துள்ளேன். மேலும், உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளேன். திரைப்படம் தயாரித்தல் எப்போதுமே என்னுடைய ஆர்வமாகவும் எனக்குப் பிடித்த ஒரு விஷயமாகவும் இருந்தது. ஆஸ்ட்ரோ, வீடு புரொடக்ஷன்ஸ் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம் என்றுதான் கூறுவேன். ஒரு சிறந்தக் குழுவுடன் பணியாற்றினால், முற்றிலும் செயற்கை மழையில் படப்பிடிப்பை நடத்துதல் போன்ற பெரிய கனவுகளையும் குறிக்கோள்களையும் அடைய முடியும் என்பதை நான் அறிந்துக் கொண்டேன். ஒரு தொடரை இயக்குவது இதுவே எனது முதல் முறையாகும்.

மேலும், அதிகமான தொடர்களையும் திரைப்படங்களையும் உள்நாட்டில் இயக்குவதோடு, உள்ளூர் உள்ளடக்கங்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். ‘குருதி மழை’ தொடரின் மீது ஆஸ்ட்ரோ வைத்த நம்பிக்கைக்கும் வற்றாத ஆதரவுக்கும் இவ்வேளையில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நடிகர்: சி.குமரேசன்

குருதி மழை தொடரின் நாயகன் சி.குமரேசன்

• தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கினாலும் ஒரு கொலை வழக்கை விசாரிக்கக் கட்டாயமாக நியமிக்கப்படும் ‘கதிர்’ எனும் காவல்துறை அதிகாரியாக ‘குருதி மழை’ தொடரில் நான் நடித்தேன்.

இக்கதை 1990-ஆம் ஆண்டில் தன்ஜோங் ஃபெடெரிக் (Tanjung Federick) என்ற கற்பனை நகரத்தை ஒட்டி மலர்கின்றது. மழைக்காலங்களில் மட்டுமே தொடர் கொலைகள் நடக்கின்றன. மழை நாட்களில் மட்டுமே கொலையாளி தன் இரையை வேட்டையாடுவதை கதிர் கண்டுப்பிடிக்கிறார். இருப்பினும், இவ்வழக்கில் பணிபுரியும் போது அவர் மதுவுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையானதால், எப்போதும் தவறான காரணங்களுக்காக மக்கள் பார்வையில் தென்படுகிறார்.
|
• இதுவே எனது முதல் தொடராகும். 1990-களின் அமைப்பில், இறுக்கமான கால அட்டவணையில், செயற்கை மழையுடனும் பணியாற்றியது மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. அன்றாட வாழ்க்கையில் பயனுள்ளதாக அமையும் எண்ணிலடங்கா சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களைக் கொண்ட உயர்தர த்ரில்லர் தொடரான ‘குருதி மழை’-ஐ இரசிகர்கள் இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.