Home One Line P2 ஆஸ்ட்ரோ : பொங்கல் நிகழ்ச்சிகளின் கலைஞர்களின் நேர்காணல்

ஆஸ்ட்ரோ : பொங்கல் நிகழ்ச்சிகளின் கலைஞர்களின் நேர்காணல்

687
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒளியேறும் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சி தயாரிப்புகளில் பங்கேற்ற  நடிகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் :

குறும்புப் பொங்கல்

தேவ் ராஜா, இயக்குநர்:

  • தேவ் ராஜா, இயக்குநர் ஆஸ்ட்ரோவின் குறும்புப் பொங்கல்

    இந்நிகழ்ச்சியைப் பற்றி மேலும் எங்களிடம் கூறுவதோடு தயாரிப்புச் செயல்முறைகளைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் பெரும் மகிழ்ச்சியடைவதோடு நன்றியும் கூறிக் கொள்கிறேன். ஏனெனில், பொங்கல் திருநாளன்று இரசிகர்கள்  மகிழ வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

பாரம்பரியத்தை உள்ளடக்கத்தோடு தம்பதிகள் விருந்தினர்களாக பங்கேற்கும் அழகானத் திட்டத்தையும் இந்நிகழ்ச்சியில் நாங்கள் இணைத்தோம். படப்பிடிப்புக்கான இடத்தைத் தயார் செய்வதில் நாங்கள் பல சவால்களை எதிர்நோக்கினோம்.

ஆனால், கலைத் துறை குழுவினர் மற்றும் அவர்களின் கலை இயக்குநரின் (ரவிக்குமார் @ ரவி மண்டோ) வழிகாட்டுதலுடன் நாங்கள் அப்பணியைச் செவ்வெனே செய்து முடித்தோம். நிகழ்ச்சியின் உணர்வை அதிகரிப்பதில் ஆஸ்ட்ரோவின் படைப்புக் குழுவும் முக்கியப் பங்கு வகித்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த உள்ளடக்கத்தை வழங்கிய ஓர் இளம், ஆற்றல்மிக்க தயாரிப்பாளர் (முனேஷ்), தயாரிப்புக் குழு, வரிகள் தயாரிப்பாளர் (சந்திரா), தயாரிப்பு மேலாளர் (அற்புதராஜா), உதவி இயக்குநர் (பூபாலன்), தயாரிப்பு நிறுவனம் (ரீச் புரொடக்ஷன்ஸ்) குறிப்பாக யுகேஸ்வரன் மற்றும் சுரேஷ் மற்றும் தங்களின் சிறந்தப் பங்களிப்புகளையும் ஆதரவையும் வழங்கிய பலருடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாகும். காயத்திரி தண்டபாணியின் குரலில் சந்தேஷின் இசை அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்குப் பெரும் தாக்கத்தை அளித்தது.

  • குறும்புப் பொங்கல் நிகழ்ச்சியில் இரசிகர்கள் எவற்றை எதிர்ப்பார்க்கலாம்?

சுவாரசியங்கள் நிறைந்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. காணத்தவறாதீர்கள்!

அஹிலா சண்முகம் & இர்பான் ஜய்னி, தொகுப்பாளர்கள்:

  • குறும்புப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அஹிலா சண்முகம்,

அஹிலா: நெல் வயலுக்கு மத்தியில் படப்பிடிப்பில் ஈடுபட்டது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். மேலும், இம்மாதிரியானப் படப்பிடிப்பில் ஈடுபட்டது எனது முதல் அனுபவமாகும்.  முழு பாரம்பரிய உடையில், நெல் வயலின் நடுவில், சூடான வெயிலில் நின்று படப்பிடிப்பில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவம்.

எல்லாவற்றையும் ஏற்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரின் அளப்பரியப் பங்கு. பாரம்பரிய அடிப்படையிலான வேடிக்கையான விளையாட்டு அங்கங்களே எனக்குப் பிடித்தத் தருணமாகும். குறிப்பாக, விருந்தினர்களுக்குக் கூடத் தெரியாத ஒரு ஆச்சரியக் கூற்றை உள்ளடக்கிய பொங்கல் தயாரிக்கும், இறுதி அங்கம். இணை தொகுப்பாளரான இர்பானுடன் இணைந்துக் குறும்புப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இனிமையான அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இர்பான்: குறும்புப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் நிகழ்ச்சியின் தலைப்பைப் போலவே குறும்புத்தனமாக இருந்தது – அதாவது, தொகுப்பாளர்கள் மட்டுமல்லாது, விருந்தினர்களும் குறும்புத்தனம் கொண்டிருந்தனர். விளையாட்டுகளும் போட்டியாளர்களும் வேடிக்கையாக இருந்தனர். இரசிகர்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்து வயிறுக் குலுங்கச் சிரிப்பர் என்பதை என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.

ஏனென்றால், திரைக்குப் பின்னால் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் எங்களின் செயல்களைப் பார்த்துக் கண்களில் நீர் மல்கும் அளவுக்குச் சிரித்ததாக கூறியது என்னால் நினைவுக் கூர முடிகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. எனக்கும் எனது இணை தொகுப்பாளரான அஹிலாவுக்கும் வாய்ப்பு அளித்தமைக்கும் எங்களின் வசதிக்கு ஏற்ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனுமதித்ததற்கும் இயக்குநர், தேவ் ராஜா மற்றும் தயாரிப்பாளர், முனேஷ் ஆகியோருக்கு நன்றி. இறுதியாக, இந்நிகழ்ச்சி உங்கள் அனைவருக்கும் ஒரு பொங்கல் விருந்தாக அமையும்.

செயிண்ட் டி.எஃப்.சி & அஞ்சலி, தேவகுரு & ரதி விஷாலி, சாஸ்தன் & கரிஷ்மா, கேசவன் & பாஷினி, பங்கேற்பாளர்கள்:

  • ஒரு ஜோடியாக பங்கேற்பதில் உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்?
செயிண்ட் -அஞ்சலி

செயிண்ட் டி.எஃப்.சி & அஞ்சலி: இது போன்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சி எங்களுக்கு முதல் முறை மட்டுமல்லாது, தொலைக்காட்சியிலும் இதுபோன்ற  முயற்சிகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்ட முதல் விளையாட்டு நிகழ்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம். மற்ற ஜோடிகளுடன் இணைந்துப் போட்டியிடுவது சுவாரசியமாக இருந்தது. எங்களுக்குப் பிடித்த தருணம், பொங்கல் தயாரித்தது. அதற்கானக் காரணத்தை நீங்களே பார்த்து அறிந்துக் கொள்வீர்கள். இது மிகவும் இலகுவான அனுபவமாக இருந்தது. மேலும், நாங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்களை சந்தித்து அற்புதமான நட்பை உருவாக்கியுள்ளோம்.

தேவகுரு – ரதி விஷாலி

தேவகுரு & ரதி விஷாலி: பிற்காலத்தில் எங்கள் குழந்தைகளுக்குக் கூட நினைவூட்டும் வகையில் ஒரு அழகான அனுபவம். நாங்கள் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அதில் பெரும்பாலானவை நன்றாகவே வேலை செய்தன.  இரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறோம். எங்களின் விருப்பமானத் தருணம் உற்சாகங்கள் மற்றும் சவால்களைக் கொண்ட பொங்கல் தயாரிக்கும் பணியே ஆகும்.

சாஸ்தன் & கரிஷ்மா

சாஸ்தன் & கரிஷ்மா: ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் முதல் முறையாக ஜோடியாக பங்கேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.  மேலும், இந்நிகழ்ச்சியை இன்னும் வேடிக்கையாக மாற்றிய பிற அற்புதமான ஜோடிகளையும் நாங்கள் சந்தித்தோம். பொங்கல் தயாரிக்கும் அங்கமும் பொங்கல் பாடலின் படப்பிடிப்பும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இரசிகர்கள் நிகழ்ச்சியை ரசிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேசவன் – பாஷினி

கேசவன் & பாஷினி: ஜோடியாக ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே எங்களின் முதல் மற்றும் மறக்கமுடியாத அனுபவம். நிகழ்ச்சி முழுவதும் நாங்கள் பல சுவாரசியங்களை இரசித்தோம். குறிப்பாக, மற்ற அனைத்து ஜோடிகளுடனும் இணைந்ததுச் சிறப்பானத் தருணம். பொங்கலை நாங்கள் மிகவும் தந்திரமான முறையில் செய்தப் பகுதி நிச்சயமாக மறக்க முடியாது. இப்பொன்னான அனுபவம் என்றும் எங்கள் வாழ்விலும் மனதிலும் பசுமரத்தாணிப்போல் பதிந்திருக்கும்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” தொலைக்காட்சி திரைப்படம்

எஸ். மதன், இயக்குநர்:

  • இதை இயக்கிய உங்களின் அனுபவங்கள் மற்றும் இரசிகர்கள் எவற்றை எதிர்பார்க்கலாம் என்று கூறுங்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் டெலிமூவியை இயக்கியது மறக்க முடியாத அனுபவம். நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்ததால் நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. ஒரு உயர்தர டெலிமூவியை தயாரிப்பதே எனது முக்கிய குறிக்கோளாகும். எனவே, திரையரங்கு வெளியீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கூட நாங்கள் வாடகைக்கு எடுத்தோம்.

மேலும், படப்பிடிப்பு இடங்கள் புதுமையாக இருப்பதை உறுதிப்படுத்த சிறிது காலம் எடுத்தது. எங்களின் படப்பிடிப்பு 13 நாட்களில் முடிந்தது. எங்களின் தயாரிப்பு மேலாளர், தீபா சந்திரனின் உதவிக்கு இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எங்களின் ஒளிப்பதிவாளர், கவியரசு லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவு ஷாட்களிலும் தனது சிறந்ததை வழங்கினார். இது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தரும்.

எங்களின் பதிப்பாசிரியர், தினேஸ்வரனும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு திரையரங்குத் திரைப்படத் தோற்றத்தை வழங்க கடுமையாக உழைத்தார் மற்றும் இசை இயக்குநர் லிங்கேஸ், 2 முழுப் பாடல்களையும் 2 வாரங்களுக்குள் முடித்தார். இந்த உயர்தர  டெலிமூவியை இரசிகர்கள் நிச்சயமாகக் கண்டு மகிழ்வர். இந்த டெலிமூவியின் தனித்துவமான பகுதி அதன் கதை. இந்த டெலிமூவி சமூகத்திற்கு ஒரு வலுவான கருத்தை உள்ளடக்கியதோடு மிகவும் தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான காதல் கதையைச் சித்தரிக்கின்றது.

மதன், இயக்குநர்
  • இந்த டெலிமூவியை இயக்க உங்களைத் தூண்டிய உத்வேகங்கள் யாவை?

என் வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களே எனது உத்வேகம். உண்மையான காதல் என்றால் என்ன, சில உறவுகளில் ஏற்படும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது போன்ற நுணுக்கங்களை இந்த டெலிமூவியைப் பார்த்து அறிந்துக் கொள்ளலாம்.

மனோகரன் சுப்பரமணியம் & விடியா லியானா, நடிகர்கள்:

  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் டெலிமூவியில் நீங்கள் வகிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.
மனோகரன் சுப்பரமணியம்

மனோகரன்: நான் ஒரு அழகான ஆண் மகனான  ‘கவி’ கதாபாத்திரத்தில் நடித்தேன். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க கவி தன்னால் முடிந்தை முயற்சி செய்வார். அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் ஒரு உணவுப் பிரியர். என் மனதிற்கு நெருக்கமான உணர்ச்சிகரமான காட்சிகளில் நான் நடித்துள்ளேன். இது எனக்குப் பழக்கமான ஒரு கதாபாத்திரம் அல்ல. எனவே, அதனுடன் ஒத்துப்போக என் இயக்குநருடன் சில நாட்கள் ஒத்திகைகளில் ஈடுப்பட்டேன். நான் விரும்பி நடித்ததைப் போலவே ரசிகர்களும் அந்த கதாபாத்திரத்தை இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

விடியா

விடியா: என் மனதிற்கு நெருக்கமான மற்றும் கடினமான ‘அமுதா’ எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். எனவே, எனக்கு ஒத்திகைத் தேவைப்பட்டது. அமுதா தனியாக வசிக்கும் அமைதியான மற்றும் சாதுவான ஒருப் பெண். தனது கடந்தக் காலத்தை மறந்து தன்னை மகிழ்ச்சிபடுத்தும் ஒரு பயணத்தில் அவள் ஈடுபடுகிறாள். அவளும் ஒரு உணவு விரும்பி.

  • இந்த டெலிமூவிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

மனோகரன்: பொங்கலின் போது ரசிகர்கள் இந்த டெலிமூவியை விரும்பி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், ஒரு உயர் தர தயாரிப்பை வழங்கும் நோக்கில் பெரும்பாலும் புதிய நடிகர்கள் மற்றும் குழுவினரால் தயாரிக்கப்பட்ட ஒரு டெலிமூவி. இந்த டெலிமூவி அதிக ரசிகர்களை சென்றடைவதோடு அதிக பாராட்டுகளையும் பெரும் என்று நம்புகிறேன்.

விடியா: இந்த டெலிமூவி வெற்றியடையும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஏனெனில், நாங்கள் அனைவரும் எங்களது சிறந்ததை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.