Home One Line P1 பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்கட்டும் – சரவணன் வாழ்த்துச் செய்தி

பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்கட்டும் – சரவணன் வாழ்த்துச் செய்தி

606
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தமிழர்களின் பண்டையக் கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள், விழாக்கள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றித்து இருப்பவை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடுபவை என்பதில் ஐயமில்லை.

அந்த வரிசையில் தை மாதத்தில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாளாக, இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அறுவடைத் திருநாளாகவும் அறியப்படும் தைப்பொங்கலில் விவசாயிகளின் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், அவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக அமைகிறது.

#TamilSchoolmychoice

“பழையன கழிதலும், புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” – நன்னூல் நூற்பா 426

நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், இப்படியாக பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”.

அடுத்து தை முதல்நாள் சூரியனுக்காக பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் ‘காணும் பொங்கல்’ என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம்.

காணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு, பெரியோர் ஆசி பெறுதல் என்றாலும் இன்றைய சுகாதாரச் சூழலை மனதில் கொண்டு கொஞ்சம் விலகி நின்றே கொண்டாடுவோம்.

நமக்கு வரவில்லை என்ற அலட்சியம் வேண்டாம். கொரோனா இருக்கும் வரை பழைய வாழ்க்கை முறை சாத்தியமல்ல. புதிய நடைமுறைகளுடன் கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதுதான் சிறப்பு. கொரோனாவின் தாக்கம் இன்னும் பல உள்ளங்களில், பலர் இல்லங்களில் இருந்துதான் வருகிறது.

‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கூற்றுக்கேற்ப கொரோனாவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது. கூடிய விரைவில் இந்த அனைத்துலக பரவலில் இருந்து முழுமையாக விடுபடும் நேரமும் வந்துவிட்டது. அதுவரை கொஞ்சம் பொறுமை காப்போம்.

உல்லாச ஒன்றுகூடல்கள், கேளிக்கை வைபவங்களைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்.
அதே வேளையில் அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளைக் களைய முன்வைத்துள்ள பல்வேறு திட்டங்கள், குறிப்பாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ வழி “பெஞ்சானா கெர்ஜாயா” வின் ஊக்கத் தொகைகள், வேலை வாய்ப்புத் திட்டம், வேலை இழந்தோர், வேலை தேடுவோருக்கான வேலை காப்பீட்டு முறையின் நன்மைகள், MyFutureJobs திட்டத்தின்வழி பணியமர்த்தம் இப்படி நிறைய உதவிகள் நிறைய உள்ளன.

மேலும் மனிதவள மேம்பாட்டு நிதி, HRDF மூலம் “பெஞ்சானா HRDF” வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டங்கள், தொழிற்புரட்சி 4.0 திட்டங்கள், திறன் மேம்பாட்டு இலவச பயிற்சிகள், சுய தொழில் செய்வோருக்கான உதவிகள் என பல்வேறு திட்டங்களும், உதவிகளும் செய்தவண்ணமே உள்ளோம். உங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்று பயனடையுங்கள்.

இவ்வேளையில் சிறு தொழில் அல்லது பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிமார்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்கள் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள். அனைத்துலகப் பரவலைத்தடுக்க பணியாளர்களுக்கும் கிருமி நாசினி (சனிடைசர்), சுத்தமான சூழல், இடைவெளி விட்டு இருக்க இடம் போன்ற புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

இந்த தைத்திருநாளில் பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான சூழல் நமக்காக உண்டு என்று நம்பிக்கையோடு வாழ்வோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.

வாழ்த்துகளுடன்,
உங்கள் நலன் பேணும் உங்களில் ஒருவன்
டத்தோஸ்ரீ எம்.சரவணன்