கோலாலம்பூர்: புத்ராஜெயாவில் வியாழக்கிழமை நடைபெற்ற “இலவச கோழி விநியோகம்” திட்டத்தின் அமைப்பாளர்களுக்கு காவல் துறையினர் இன்று அபராதம் விதித்தனர்.
புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் பாட்சில் அலி கூறுகையில், இந்த விநியோகத்திற்கு காவல் துறையின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இலவச கோழி விநியோக திட்டம், முதலில் வருபவர்ககளுக்கு முதல் சேவை என்ற கருத்துடன் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் இப்பகுதியில் திரண்டது.
“காவல் துறையின் விசாரணையில், பங்கேற்பாளர்களிடையே கூடல் இடைவெளி நடைமுறைப்படுத்தப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணங்கத் தவறிவிட்டது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சட்டத்தை அமல்படுத்துவதில் காவல்துறை எந்தவொரு நபருடனும் சமரசம் செய்யாது என்று அவர் கூறினார்.
புத்ராஜெயா அம்னோ இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலவச கோழி விநியோகம்” திட்டத்தின் காரணமாக வியாழக்கிழமை இரவு புத்ராஜெயா பகுதி 9-இல் மக்கள் கூட்டம் நிரம்பியது.
போக்குவரத்து நெரிசல்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது. அதில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் கோழிக்காக வரிசையில் நிற்பதைக் காட்டுகின்றன.