Home One Line P2 ஆஸ்ட்ரோ “விழுதுகள் – சமூகத்தின் குரல்” – படைப்பாளர்களின் அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ “விழுதுகள் – சமூகத்தின் குரல்” – படைப்பாளர்களின் அனுபவங்கள்

728
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக சில மாற்றங்களுடன் – மாறுபட்ட உள்ளடக்கங்களுடன் – ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறிவரும் “விழுதுகள்” நிகழ்ச்சி இரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த நிகழ்ச்சியின் படைப்பாளர்கள் நேர்காணல்களின் வழி தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்:

• ஒரு தொகுப்பாளராக உங்களின் அனுபவத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்:

செல்வமலர் செல்வராஜு

செல்வமலர் செல்வராஜு: மிகவும் உற்சாகமாக உள்ளது! இவ்வகையான நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றுவதோடு அனைத்து தரப்பு மக்களுடன் இணைவது இதுவே எனது முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில், நான் தனிப்பட்ட முறையில் மிகவும் எளிதான ஒன்றாகத்தான் கருதினேன். ஆனால், ஒரு நேரலை நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகையில் அது முற்றிலும் மாறுபட்டது என்பதை உணர்ந்தேன்! நான் நிர்வகிக்க வேண்டிய முதல் விஷயம் தொகுப்புரையோ (ஸ்கிரிப்ட்), நடுநிலையாளர்களோ (panelists), குழுவினரோ, ஒப்பனையோ அல்ல, ஆனால் ஒளிப்பதிவுக் கருவிகள் (CAMERAS)! இந்நிகழ்ச்சியில் அவர்களே எனது நெருங்கிய நண்பர்கள். அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்ற நுணுக்கங்கள் உங்களுக்குத் தெரிந்து விட்டால், பாதிப் போரை வென்றது போல்தான்.

இங்கு, ஒவ்வொரு நாளும் ஒரு புதியக் கற்றல் அனுபவமே. விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியில் நான் ஒரு பகுதியாக இருப்பதிலும் சமூகத்திற்கு ‘செல்வமலர்’-ஆக பங்களிப்பை வழங்குவதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இளஞ்செழியன் வேணுகோபால்

இளஞ்செழியன் வேணுகோபால்: இவ்வளவு காலம் கொள்கைகளை வரைந்து செயலாக்குவதிலும் களப்பணியிலும ஈடுபட்டிருந்த எனக்கு, இது ஒரு புதிய அனுபவம். பயனுள்ளத் தகவலைச் சுவையான, கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சொல்ல வேண்டும். கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஈஸ்வரி பலன்சாமி

ஈஸ்வரி பலன்சாமி: இன்றுவரை இது ஒரு நல்ல பயணம் என்றுதான் கூறுவேன். நான் சுமார் 13 ஆண்டுகளாக ஊடகத்துறையில் இருக்கிறேன். ஆனால், ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியதில்லை. குறிப்பாக, “விழுதுகள்: சமூகத்தின் குரல்” போன்ற மிகவும் பயனுள்ள தமிழ் ஊடகத் தளத்தில் பணியாற்றியதில்லை.

தொலைக்காட்சி, மிக முக்கியமாக ‘விழுதுகள்: சமூகத்தின் குரல்’ மக்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப்பெரியது. ஆகவே, முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் வாதங்கள் துல்லியமானதாகவும் மற்றும் இது நமது சமூகத்தினரிடையே ஒரு நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதிச் செய்வது எனது தலையாயக் கடமை. தலைப்புத் திட்டங்களும் விவாதங்களும் இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய பகுதியாகும். இது எனது பத்திரிகையாளர் அனுபவத்தையும் சார்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் என்னால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணரும்போது, ஒரு தொகுப்பாளராக எனது பங்கை பாராட்டுவதோடு மேலும் செவ்வனே ஆற்றவும் ஊக்கமளிக்கிறது.

இளந்தமிழ் மருதை

இளந்தமிழ் மருதை: நான் பல நிகழ்ச்சிகளை இதற்கு முன் படைத்துள்ளேன், நேரலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆயினும், நேரலையில் ஒரு தொகுப்பாளராக நிகழ்ச்சி படைப்பது இதுவே முதல்முறை என்பதனால் ஆர்வமாக உள்ளேன். தொழில்நுட்பத் துறைச் சார்ந்த அணுகுமுறைகள் எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றது. படிப்பறிவு எவ்வளவு இருந்தாலும் பட்டறிவு எவ்வளவு முக்கியம் என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

• இந்நிகழ்ச்சியில் உங்களின் மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

செல்வமலர் செல்வராஜு: என் மனதில் பல மறக்கமுடியாத தருணங்கள் உள்ளன. எனது 3-வது அல்லது 4-வது நிகழ்ச்சிக்கான முழு அறிமுக தொகுப்புரையும் (script) மனனம் செய்துவிட்டேன். அநேகமாக ‘நீர்’-ஐ பற்றிய தலைப்பு (சரியாக நினைவில்லை). இரு நடுநிலையாளர்களின் (panelists) பெயர்களையும் குறிப்பிடும்போது நான் மனனம் செய்தவற்றை மறந்துத் தவறான பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டேன்.

அச்சச்சோ… அது என்னை தர்மசங்கடமான நிலைக்கு வித்திட்டது. என்னைக் காப்பாற்றிய காதணிகளைக் கண்டுபிடித்த மனிதனுக்கு இவ்வேளையில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இது எனது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. நிகழ்ச்சியின் போது, என் தோற்றத்தை கவனிக்கும் மக்களும் இருந்தனர்! அதுவும் சற்று அருமையாகத்தான் இருந்தது.

எனக்கென ஓர் ஒப்பனையாளர் (stylist), ஒப்பனைக் கலைஞர் (make-up artist) என பலர் இருக்கின்றனர். எனது நண்பர்கள் சிலர் நான் என்ன அணிந்திருக்கிறேன், நான் எவ்வாறு தோற்றமளிக்கிறேன் என்பதைப் பார்க்கவே இந்நிகழ்ச்சியை பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் நான் அழகாக தோற்றமளிப்பதை உறுதிசெய்ய கடுமையாக உழைக்கும் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்களான யோகேஷ் மற்றும் திவ்யாவுக்கு நன்றி (நான் அணிந்திருக்கும் காதணிகள் முதல் காலணிகள் வரை).

இளஞ்செழியன் வேணுகோபால்: எல்லாம் புதுசு. ஒவ்வொன்றும் மறக்க முடியாத தருணமே.

ஈஸ்வரி பலன்சாமி: என்னுடன் மிகவும் திறமையான இணை தொகுப்பாளர்கள் பணியாற்றுகையில் ஒவ்வொரு அத்தியாயமும் மறக்கமுடியாத தருணமாகும். அவர்களுடன் கடந்துச் செல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனக்கு எப்போதும் ஒரு புதிய அனுபவம்தான். ஏனெனில், நாங்கள் ஒருவருக்கொருவரிடமிருந்து கற்றுக்கொள்வதோடு சிறந்த தொகுப்பாளர்களாக இணைந்து வளர்கிறோம்.

இளந்தமிழ் மருதை: எல்லா நிகழ்ச்சிகளும் புதிய அனுபவமாகத்தான் இருக்கின்றது. ஆயினும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புதியவர்களைப் பேட்டிக் காண்பதனால் புதிய அனுபவமாகத்தான் இருக்கின்றது. அங்கு வேலை செய்யும் அன்பர்கள் சிறந்த பிணையத்தை (Network) உருவாக்கி வைத்துள்ளார்கள். அது அவர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எப்படி நன்மையாய் அமைகின்றது என்பதனைக் காணமுடிகின்றது.

• இந்நிகழ்ச்சிக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

செல்வமலர் செல்வராஜு: எங்களால் முடிந்தவரை தைரியமாக உள்ளோம். மலேசியாவில் முதல் தர தமிழ் பேச்சு நிகழ்ச்சியாக பீடு நடைப்போடும் இலக்கை கொண்டுள்ளோம். ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை (குறைந்தது வாரத்தில் மூன்று நாட்கள்), இரவு 9 மணிக்கு அனைத்து மலேசிய இந்தியர்களும் ‘விழுதுகள்: சமூகத்தின் குரல்’, நேரலை பேச்சு நிகழ்ச்சியை கண்டுக் களிக்க ஊக்குவிக்கிறோம். மேலும் இந்நிகழ்ச்சியின் வழி நமது உள்ளூர் சமூகத்தில் படர்ந்துள்ள சில சிக்கல்களைத் தீர்க்கவும் முயற்சிக்கிறோம்.

இது கடினமானதாக இருந்தாலும் கூட அதில் வெற்றியடைய முயற்சி செய்கிறோம்.  ‘தீண்டத்தகாத’ தலைப்புகளையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம்! மேலும், நமது சமூகம் கூட்டை விட்டு முழுமையாக வெளியுலகிற்கு வர வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்!

இளஞ்செழியன் வேணுகோபால்: அரசியல், பொருளியல் வலு குறைவாக உள்ள மலேசிய இந்திய சமூகம், தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவும். உயர்த்திக் கொள்வதற்கும் புதிய வியூகங்களையும் அணுகுமுறைகளையும் கையாள வேண்டியுள்ளது. அந்தப் பரிணாம மாற்றத்துக்கான களமாக ‘விழுதுகள்: சமூகத்தின் குரல்’ அமையுமென எதிர்பார்க்கிறேன்.

ஈஸ்வரி பலன்சாமி: அதிகமான மக்கள் இந்நிகழ்ச்சியைக் காண்பதோடு ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எங்களுடன் பகிர்வார்கள் என பெரிதும் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணத்திற்காகவே ‘விழுதுகள்: சமூகத்தின் குரல்’ என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் உங்களைக் கேட்கிறோம், உங்களிடமிருந்து தொடர்ந்துக் கேட்க விரும்புகிறோம். இது உங்களுக்கானத் தளம். நிகழ்ச்சி தொடர்ந்து இயங்கும் என்று நம்புகிறேன்.

நிச்சயமாக, நாங்கள் இரசிகர்களுக்கு ஏற்ற ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளை தவறாமல் கொண்டு வருவோம். நம் சமூகத்தை சிந்திக்கவும் கருத்துக்களை எடுத்துரைக்கவும் வழிவகுக்கும் நோக்கங்களைக் கொண்ட விழுதுகள்: சமூகத்தின் குரல் போன்றப் உரை நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. எனவே,இரசிகர்களின் வற்றாத ஆதரவு எங்களை செவ்வென செயல்பட ஊக்கமளிக்கும் ஒரு பெரிய சொத்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இளந்தமிழ் மருதை: நிகழ்ச்சி இன்னும் தரமாய் அமைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு பல்வேறு நிலைகளில் இருந்து உதவிக்கரமும் பல்வேறு தளங்களில் இருந்து ஆலோசனையும் தேவை. அறிவார்ந்த நிகழ்ச்சியான விழுதுகள்: சமூகத்தின் குரல் நிபுணத்துவம் நோக்கிச் செல்லவேண்டும். தமிழ் பேசும் பொதுமக்கள் அறிவார்ந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் மற்றும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். சமுகத்தை ஆட்டம் பாட்டம் என்ற தளத்தில் இருந்து விடுவித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். நாட்டு நடப்புகள் மற்றும் உலக நடப்புகளை தாய்மொழியில் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். தாயுடன் பேசுவது எவ்வளவு முக்கியமோ அதுபோலவேதான் தாய்மொழியில் பேசுவதும் முக்கியம்.

‘விழுதுகள்: சமூகத்தின் குரல்’ நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழியாகவும், மறு ஒளிபரப்பை மறுநாள் காலை 9.30 மணிக்குக் கண்டு களிப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.